உடல் நலம் ஆரோக்கியத்துடன் இருக்க ஒரு நபர் ஒரு நாளைக்கு குறைந்தது 7000 ஸ்டெப்ஸ்களோ அதிகபட்சம் 10 ஆயிரம் அடிகளோ எடுத்து வைத்து நடக்க வேண்டும் என தொடர்ந்து மருத்துவர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
அப்படி செய்வதன் மூலம் முறையாக தூங்கி, நேரத்திற்கு சாப்பிடும் பழக்கம் உண்டாகும். இதனால் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டு நோயில்லா ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக ஜிம்மிற்கு சென்றுதான் நடக்கவேண்டும் என்றில்லை, அலுவலகங்கள், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் உள்ள லிஃப்ட், எஸ்கலேட்டர்ஸ்களை பயன்படுத்துவதை தவிர்த்து, படிக்கட்டுகளில் ஏறி இறங்கினாலே போதுமானதாக இருக்கும்.
அதனை உணர்த்தும் வகையிலான வீடியோ ஒன்று ட்விட்டர் தளத்தில் வைரலாகி 15 லட்சத்துக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது. அதில், ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோல்மின் ஓடென்ப்ளான் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் சாதாரண படிக்கட்டுகள் மற்றும் மிதவைப் படிக்கட்டுகள் (escaltor) இருக்கின்றன.
பெரும்பாலான மக்கள் மிதவைப் படிக்கட்டுகளையே பயன்படுத்துகிறார்கள். ஆகவே படிக்கட்டுகளை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்க வேண்டும் என எண்ணி அந்த படிக்கட்டுகளை பயன்படுத்த நூதனமான வழியை கையாண்டிருக்கிறார்கள்.
அதன்படி, எஸ்கலேட்டருக்கு பக்கவாட்டில் இருக்கும் படிக்கட்டுகளை பியானோ கருவி போன்று மாற்றியமைத்து அதன் மீது நடந்தால் இசை ஒலிக்கும் வகையில் வடிவமைத்திருக்கிறார்கள். மறுநாள் அந்த சுரங்கப்பாதைக்கு வரும் மக்கள் பியானோ படிக்கட்டுகளை பார்த்து எஸ்கலேட்டரை தவிர்த்து அதில் நடக்கத் தொடங்குகிறார்கள். இதனையடுத்து சிறார்கள், நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்கள் என அனைவரும் படிக்கட்டுகளில் ஏறி நடக்கிறார்கள்.
ALSO READ:
ஒவ்வொரு முறை பியானோ படிக்கட்டுகளில் நடக்கும் போது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல புத்துணர்ச்சியோடு இசையை கேட்டபடியே நடக்கவும் செய்கிறார்கள். ஆரோக்கியமும் அவர்களுக்கு கூடுவதாக இருக்கிறது. சிலர் அதில் ஏறி விளையாடவும் செய்கிறார்கள். செல்லப்பிராணிகளாக நாய்களையும் அந்த படிக்கட்டுகளில்தான் ஸ்வீடன் மக்கள் அழைத்துச் செல்கிறார்கள்.
இதன் மூலம் 66 சதவிகித மக்கள் சாதாரண படிக்கட்டுகளை பயன்படுத்துவதையே தற்போது விரும்புகிறார்கள். வேடிக்கையான செயல்கள் சிறப்பான நல்ல விஷயங்களை மாற்றுவதற்கு உந்துதலாக இருக்கும் என்றும், இதனை fun theory என்றும் அழைக்கிறார்கள்.
ALSO READ:
Odenplan மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதையில் இந்த பியானோ படிக்கட்டுகளை பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் விளம்பர நிறுவனமான NORD DDB உடன் இணைந்து கடந்த 2009ம் ஆண்டு அமைத்திருக்கிறது.
இதனையடுத்து மெல்பர்ன், மிலன், இஸ்தான்புல், கொலம்பியா என கடந்து இந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்திலும் இந்த Musical Stairs எனும் பியானோ படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இது ஆரோக்கியமான பழக்கத்துக்கு இட்டுச் செல்கிறது. மிகவும் பிடித்தமான முன்னெடுப்பாக இருக்கிறது என பலரும் ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்கள்.