“என்னை கருணை கொலை செய்து விடுங்கள்” என மாற்றுத்திறனாளி ஒருவர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ள வீடியோ இனணயத்தில் வேகமாக பரவி வருகிறது. இவர் யார், இவரின் கோரிக்கை என்ன, எதனால் இவர் இப்படி ஒரு வீடியோ வெளியிட்டார் என ஆராய்ந்தோம்.
சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ரேனு (வயது 44). இவர்தான் வீடியோவில் பேசியிருந்தது. தனது வீடியோவில் அவர், “நான் ஒரு மாற்றுத்திறனாளி. எனக்கு தாய், 2 அண்ணன்கள், 1 தம்பி என பலர் உள்ள போதிலும், யாரும் என்னை கவனித்துக் கொள்வதில்லை. நான், எங்கள் வீட்டில் உள்ள பகுதியிலேயே ஈரம் மக்கள் சேவை என்ற மையத்தை நடத்தி வருகிறேன். எனக்கு 20 வயதில் இருந்து தசை சிதைவு நோயால் இரண்டு கை மற்றும் கால்களும் செயல் இழந்துவிட்டது. தற்போது 44 வயது ஆகிறது. இதுவரை திருமணமாகாமல் தனியாக எந்த ஒரு ஆதரவும் இன்றி வாழ்ந்து வருகிறேன்.
எனது குடும்பம் மிகவும் வசதியான குடும்பம். சொல்லப்போனால், 30 க்கும் மேற்பட்ட எங்கள் வீடுகள் வாடகைக்கு விடப்பட்டு உள்ளது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ. 5 கோடிக்கு மேல் இருக்கும். சொத்து நிறைய இருப்பதால், எனக்கென்று ஒவ்வொரு மாதமும் வரும் மாற்றுத்திறனாளி உதவித்தொகையை கூட வேண்டாமென சொல்லிவிட்டேன். அத்தொகை, என்னை போன்று மற்றொருவர் பயன்பெற உதவட்டும் என வாங்காமல் வாழ்ந்து வருகிறேன்.
தொடர்புடைய செய்தி: தசை சிதைவு நோய்: அரிதான நோயும் அறியவேண்டிய தகவல்களும்!
ஆனால் தற்போது என்னை எனது குடும்பத்தினர் கவனிப்பதில்லை. உணவு, பராமரிப்பு மற்றும் மருத்துவ உதவி செய்யுங்கள் என என் அம்மாவிடம் கேட்டதற்கு, அவரே மறுத்துவிட்டார். மட்டுமன்றி பெற்ற தாயே எனது குறைபாடுகளை குறை சொல்லி, உடன்பிறந்த சகோதரர்கள் மூலம் அடித்து சித்திரவதை செய்து வருகிறார். இதுகுறித்து பலமுறை காவல்துறையில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த வீடியோ வழியாக எனது உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் ஏதாவதொரு உதவி செய்து, நான் வாழ மறுவாழ்வு செய்து தருமாறு தமிழக முதல்வர் மு க ஸ்டாலினிடம் தாழ்மையான வேண்டுகோள் வைக்கிறேன். ஐயா, நான் உயிர் வாழ வழிவகை செய்யுங்கள்… இல்லையெனில் என்னை கருணைக் கொலை செய்து விடுங்கள்” என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
மேலும் இதுகுறித்து முதல்வர் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி உள்ளதாகவும், அதற்கு அவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி உள்ளதாகவும் கூறியுள்ளார். விரைந்து இந்த மாற்றுத்திறனாளியின் வாழ்வில் மாற்றம் நிகழ்வதால் மகிழ்ச்சியே!