குரங்கு அம்மை pt web
ஹெல்த்

குரங்கம்மையில் புதியவகை; பதற்றத்தில் உலக நாடுகள்.. அவசர நிலையாக கருதும் WHO.. இந்தியாவின் நிலை என்ன?

Angeshwar G

குரங்கம்மை வைரஸில் புதிய வகை

மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் புதிய வகையான குரங்கு அம்மை வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய வகைக்கு clade 1b mpox என பெயரிடப்பட்டுள்ளது. இது முந்தைய வகைகளைக் காட்டிலும் வேகமாகப் பரவக்கூடியது என்றும் குழந்தைகளிடையே இறப்பு சதவீதம் 10% வரை அதிகமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கம்மை வைரஸில் இரு வகைகள் இருக்கின்றன. கிளேட் I மற்றும் கிளேட் II. இதில் க்ளேட் I மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் காணப்படுகிறது. க்ளேட் II மேற்கு ஆப்ரிக்காவில் காணப்படுகிறது. இதில் க்ளேட் II குறைவான பாதிப்பை ஏற்படுத்துபவை. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 99% பேர் குணமடைந்துள்ளனர். ஆனால், க்ளேட் I கடுமையான இறப்புகளை ஏற்படுத்துகிறது. இதில் க்ளேட் I b குழந்தைகளிடையே 10% வரை அதிகமான இறப்பை ஏற்படுத்துகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பொது சுகாதார அவசர நிலை

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், "இந்த பரவல் சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக கருதப்படுகிறது. இந்த பரவல் மிகவும் கவலைக்குரியது. பரவலைத் தடுக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் ஒருங்கிணைந்த சர்வதேச செயல்பாடுகள் அவசியம்" எனக் கூறியுள்ளார்.

முன்னதாக who மற்றும் பாதிக்கப்பட்ட நாடுகளின் நிபுணர்கள், குரங்கம்மையால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான தரவுகளை வழங்கினர். இந்த தரவுகளை மறுபரிசீலனை செய்வதற்காக, சர்வதேச சுகாதார விதிமுறைகள் தொடர்பான குழு ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனையின் முடிவிலேயே உலக சுகாதார அமைப்பின் தலைவர் இதை பொது சுகாதார அவசர நிலை என தெரிவித்துள்ளார்.

காங்கோ மற்றும் அண்டை நாடுகளில் clade 1b

ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் பிற வளரும் நாடுகளை புதிய வகையான clade 1b குரங்கம்மை நோய் கடுமையாக பாதித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த புதிய வகை கடந்த ஆண்டு முதன்முறையாக கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் பாலியல் தொடர்புகள் மூலமாகவே பரவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கோவின் அண்டை நாடுகளான ருவாண்டா, உகாண்டா, கென்யா மற்றும் புருண்டி போன்ற நாடுகளிலும், clade 1b குரங்கம்மை நோய் பரவியுள்ளது. இது அந்தந்த நாடுகளில் உள்ள ஆய்வகங்களின் ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவருக்கும் சோதனை மேற்கொள்ளும் பட்சத்தில் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கின்றனர் நிபுணர்கள். மேற்கண்ட நாடுகளில் வைரஸ் தொற்றால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

116 நாடுகளில் பாதிப்பு

காங்கோவில் கடந்த 10 ஆண்டுகளாக குரங்கம்மை நோயின் பாதிப்புகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகமாகவே இருக்கிறது. இந்த ஆண்டு இதுவரைக்கும் பாதிக்கப்பட்டுள்ள மக்களது எண்ணிக்கை என்பது, கடந்தாண்டு பாதிக்கப்பட்ட மொத்த மக்களது எண்ணிக்கையைவிட அதிகமாகும். கிட்டத்தட்ட 15,600க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், 537 பேர் இறந்துள்ளனர். இந்த தரவுகளை அனைத்தும் உலக சுகாதார அமைப்பு தனது இணையத்தில் பதிவு செய்துள்ளது.

பொதுவாக, உலக சுகாதார அமைப்பில் மொத்தம் 6 பிராந்தியங்கள் உள்ளன; 194 நாடுகளில் இணைந்துள்ளன. இதில் 116 நாடுகளில் குரங்கம்மை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல், 2024 ஜூன் 30 ஆம் தேதி வரை மொத்தமாக 99 ஆயிரத்து 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 208 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் இந்தியா தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ளது. 2022 ஜனவரி 1 முதல் 30 ஜூன் 2024 வரை 27 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் ஆறுதலான செய்தி என்னவென்றால், கடந்த மாதம் இந்தியாவில் தொற்று கண்டறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

(உலக சுகாதார அமைப்பின் அறிக்கை...:)

20240812_mpox_external-sitrep_35.pdf
Preview

குரங்கம்மை வைரஸ்

குரங்கம்மை வைரஸ் MPXV என்றும் குறிப்பிடப்படுகிறது. இது Poxviridae குடும்பத்தின் Orthopoxvirus இனத்தைச் சேர்ந்தது. குரங்கம்மை நோய் ஒருவரில் இருந்து மற்றவருக்கு நேரடித் தொடர்பின் மூலம் பரவுகிறது. உதாரணமாக காயம் ஏற்பட்ட பகுதிகளைத் தொடுதலைச் சொல்லலாம். விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவும் முறையில், பாதிக்கப்பட்ட விலங்குகளின் கீறல்கள், கடித்தல் போன்றவற்றின் மூலம் பரவுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் விளையாடுதல், அல்லது பாதிக்கப்பட்ட விலங்களை சமைத்து உட்கொள்ளும்போதும் தொற்று ஏற்படுகிறது.

தொற்று ஏற்பட்டு 1 முதல் 21 நாட்களுக்குள் அறிகுறிகள் ஏற்படும். அரிப்பு, காய்ச்சல், தொண்டை புண், தலைவலி, தசைவலி, முதுகுவலி போன்றவை ஏற்படும். அறிகுறிகள் 2-4 வாரங்களுக்கு நீடிக்கும் என்றும், பலவீனமான நோயெதிர்ப்பு திறன் கொண்டவர்களுக்கு மேலும் பாதிப்பு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி என்ன?

குரங்கம்மை வைரஸ்க்கான தடுப்பூசியாக MVA-BN (Modified Vaccinia Ankara-Bavarian Nordic) எனப்படும் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. இது குரங்கம்மை தடுப்பூசிக்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (U.S. Food and Drug Administration) மற்றும் ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (European Medicines Agency) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாகும்.

MVA-BN தடுப்பூசி பெரியம்மைக்கு எதிரான தடுப்பூசியாகும். ஏனெனில் பெரியம்மை மற்றும் குரங்கம்மை வைரஸ்களுக்கு இடையில் உள்ள மரபணு ஒற்றுமை காரணமாக இந்த தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. இரு வைரஸ்களும் ஆர்த்தோபோக்ஸ் வைரஸ் இனத்தைச் சார்ந்தது.

1 வயதிற்கும் குறைவான குழந்தைகள், தோல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கருவுற்றிருப்பவர்கள் போன்றவர்கள் இந்த வைரஸால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

குரங்கம்மையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தோற்றமளிக்கும் புண்களை உடையவர்களிடம் இருந்தும், விலங்குகளிடமிருந்தும் நேரடித் தொடர்புகளைத் தவிர்ப்பதன் மூலமும், நெருங்கி இருத்தலை தவிர்ப்பதன் மூலமும் சற்றே தொற்று பரவலை குறைக்கலாம்.