குரங்கம்மை முகநூல்
ஹெல்த்

இந்தியாவில் உறுதிசெய்யப்பட்டது முதல் ‘குரங்கம்மை’ தொற்று... அதென்ன க்ளேட் 1 & 2?

கடந்த 8 ஆம் தேதி குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து இந்தியா வந்த ஒருவருக்கு, குரங்கம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்தியா சுகாதாரத்துறை அமைச்சகம்.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஆப்பிரிக்காவில் குரங்கம்மை நோய் பரவிய நிலையில், 500-க்கும் மேற்ப்பட்டோர் இதனால் உயிரிழந்தனர். எனவே, ‘குரங்கம்மை’ தொற்றை கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலக சுகாதார நிறுவனம் சுகாதார அவசர நிலையாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில்தான் கடந்த 8 ஆம் தேதி ஹரியானா மாநிலத்தின் ஹரிசாரை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர், எம்-பாக்ஸ் தொற்று ஏற்பட்ட நாட்டிலிருந்து இந்தியா வந்திருந்தார். விமான நிலையத்தில் அவருக்கு வழக்கமான பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அறிகுறிகள் சில தென்பட்டதால், டெல்லி எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் சனிக்கிழமை அவர் அனுமதிக்கப்பட்டார்.

குரங்கும்மை

அப்போது, இவருக்கு எம்-பாக்ஸ் தொற்று அறிகுறிகள் உறுதிசெய்யப்பட்டன. இதையடுத்து இவருக்கு எம்- பாக்ஸ் தொற்று இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய இவரது ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த நிலையில்தான், இவருக்கு குரங்கம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. இதன்படி, இந்தியாவின் முதல் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனிமைப்படுத்தப்பட்ட அந்த நோயாளி க்ளேட் 2 குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த க்ளேட் 2 என்பது, பொது சுகாதார அச்சுறுத்தல் இல்லை.

எனவே, பொதுமக்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை. யாரும் அச்சப்பட வேண்டாம். பாதிக்கப்பட்ட நோயாளியின் உடல்நிலையும் சீராகவே உள்ளது” என்று தெரிவித்துள்ளது. அது சரி, க்ளேட் 2 என்றால் என்ன? இதைக்கண்டு ஏன் அஞ்ச வேண்டாம்? பார்க்கலாம்...

இரண்டு வகை:

குரங்கம்மை வைரஸில் இரு வகைகள் இருக்கின்றன. க்ளேட் I மற்றும் க்ளேட் II. இதில் க்ளேட் I மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் காணப்படுகிறது. க்ளேட் II மேற்கு ஆப்ரிக்காவில் காணப்படுகிறது. இதில் க்ளேட் II குறைவான பாதிப்பை ஏற்படுத்துபவை. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 99% பேர் குணமடைந்துள்ளனர். ஆனால், க்ளேட் I கடுமையான இறப்புகளை ஏற்படுத்துகிறது. இதில் க்ளேட் I b குழந்தைகளிடையே 10% வரை அதிகமான இறப்பை ஏற்படுத்துகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கம்மைக்கான நோய் அறிகுறிகள்

  • காய்ச்சல்,

  • தலைவலி,

  • தசைவலி,

  • நிணநீர்க்கணுக்கலின் அறிகுறிகள்,

  • சொறி,

  • மாகுல்ஸ் பருக்கள்,

  • வெசிகல்ஸ்,

  • சிரங்குகள்,

  • கொப்பளங்கள் (முகத்தில் தொடங்கி உடலின் மற்றப்பகுதிகளுக்கும் பரவும்)

எப்படி பரவுகிறது?

பாதிக்கப்பட்ட விலங்குகள், மனிதர்களிடம் நேரடியாக தொடர்பு வைத்துக்கொள்ளுதல், பாதிக்கப்பட்ட மனிதரிடமிருந்து இன்னொரு மனிதருக்கு சுவாச துளிகள், நீண்ட நெருங்கிய தொடர்பு போன்றவற்றின் மூலம் பரவுகிறது.