சமுதாயம் என்பது மக்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பு . ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது மக்களின் அறியாமையை தீர்ப்பதன் மூலமே சாத்தியம் ஆகின்றது. அறிதல் என்பது உருவாகும் இடத்தில்தான் அறியாமை என்பது மறையும். இதற்கு அறியாத விஷயங்கள் வெளிப்படையாக பேசப்பட வேண்டும். ஆனால் அறியாதவைகள் அறியாதவைகளாகவே இருக்கின்றன, பேசுவதற்கு தயங்கப்படும் தலைப்புகளாகவே இருக்கின்றன. அதற்கு சிறந்த உதாரணம் தான் மாதவிடாயும் அதனை சார்ந்த விஷயங்களும். இதனை பற்றிய புரிதல் பெண்களுக்கே பெரும்பாலும் இருப்பதில்லை.
இது ஒரு புறம் இருக்க, இதனால் ஒரு பெண் சமூகத்தில் இருந்து தள்ளிவைக்கப்படுகிறாள் என்றால் மிகவும் வேதனைக்குரிய விஷயம். குழந்தை பிறப்பால் போற்றப்படும் பெண் அதற்கு காரணமான நிகழ்வாக இருக்கும் "மாதவிடாய்” மூலம் தள்ளிவைக்கப்படுவது ஏன்?
மாதவிடாய் வலியை காட்டிலும் ஒரு பெண்ணுக்கு வலியை ஏற்படுத்துவது என்பது இதனை வைத்து சமூக - மத- கலாச்சார காரணங்களால் தள்ளிவைக்கப்படுவதே. இதனால் உடல்ரீதியாக உணரும் வலியோடுகூட மனரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பெண் என்பவள் பாதிக்கப்படுகிறாள் என்பதுதான் உண்மை.
இதில் உள்ள இயற்கை நிகழ்வை விளக்கி அதை பற்றிய கட்டுக்கதைகளை உருவாக்கும் அவலங்களும் அரங்கேரியுள்ளது. மாதவிடாயின் பெயரில் கடைபிடிக்கப்படும் கட்டுக்கதைகள் ஏராளம். சமூக ஊடங்கள் வளர்ச்சியை தொடந்து பல அறியப்படாத தகவல்கள் பேசப்படுகின்றன. ஆனாலும் பல்வேறு இடங்களில் மாதவிடாயின் போது அவர்களுக்கு என்று தனியான அறை, உணவு உண்ணும் தட்டு , குளியல் அறையென்பது பயன்படுத்தப்படுகின்றது. இப்படி கட்டுக்கதைகள் என்பதன் பெயரில் கடைக்கப்பிடிக்கப்படும் சில விஷயங்களுக்கு பின்புறம் உள்ள அறிவியலை அறிய வேண்டும். இதன் அடிப்படையில் குழந்தை நல மருத்துவர் மனு லக்ஷ்மி அவர்களிடம் ஒரு சில கட்டுக்கதைகள் பற்றிய சந்தேகங்கள் குறித்தும், அதற்கு பின்புலம் உள்ள அறிவியல் உண்மைகள் கேட்கப்பட்டது .
தலைக்கு குளிப்பது என்பது அவரவர் வசதிக்கு ஏற்ப மாறுபடுகின்றது. சுகாதாரத்தை அடிப்படையாக கொண்டு குளியல் என்பதை எடுத்துக்கொள்ளலாம். பெரும்பாலும் உடல் வெப்பநிலை என்பது 98.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை அடிப்படையாக கொண்டுள்ளது. தலைக்கு குளித்தால் மாதவிடாயில் பிரச்சனை ஏற்படும் என்பது எனக்கு தெரிந்த அளவு அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.
மேலும் குளிக்கக்கூடாது என்பது பெரும்பான்மையான இடங்களிலும் கூறப்படுகின்றது. இந்த விஷயத்தை பொறுத்தவரை அந்த காலகட்டத்தில் குளிப்பதற்காக ஆறு, குளங்கள் போன்ற இடங்களுக்கு செல்லவேண்டியதாக இருந்தது. எனவே ஒரு சில அசௌகர்யங்களை தவிர்ப்பதற்காக குளிக்ககூடாது என்று சொல்லப்பட்டு இருக்கலாம். ஆனால் இப்பொழுது குளியலறைகளோடு கூடிய வீடுகள் கட்டப்பட்டு விட்டது. எனவே அவரவர் வசதி மற்றும் சுகாதாரத்தை அடிப்படையாக வைத்து தலைக்கு குளிப்பது என்பதை கடைப்பிடிக்கலாம்.
மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலியென்பது சாதாரணமானது . அது குறைவாகவும் இருக்கும். அதிகமாகவும் இருக்கும். அதனை தாங்கி கொள்ள முடியாத நாட்களில் 1, 2 நாட்களுக்கு வலி மாத்திரைகளை எடுத்து கொள்ளலாம்.
குறிப்பாக, வலியை பொருத்துகொள்ள முடியாத முதல் இரண்டு நாட்களுக்கு மட்டும் வலி நிவாரணியை எடுப்பது என்பது பிரச்சனை இல்லை. மற்ற காலங்களில் கட்டாயமாக எடுக்கக்கூடாது. இது எந்த விதத்திலும் குழந்தை பிறப்பை பாதிக்காது. பெரும்பாலும் மாத்திரை எடுக்காமல் இருப்பது நல்லது.
உடற் பயிற்சி என்பது அவரவர் சௌகரியத்துக்கு ஏற்றார் போல செய்து கொள்ளலாம். வலி, உடல் சோர்வு என்பது மிகவும் அதிகமாக இருக்கிறது என்றால் செய்ய தேவை இல்லை.
இதைத்தவிர உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ற வலு இருக்கின்றது என்றால் தாராளமாக செய்யலாம். எந்த விதத்திலும் உடற்பயிற்சி செய்வது என்பது மாதவிடாயை பாதிக்காது.
பப்பாயாவில் Anti Fertality Chemicals உள்ளது. கிலோக்கணக்காக பப்பாளியை உண்ணும்போதுதான் இதில் உள்ள வேதிப்பொருள்கள் பாதிப்பை ஏற்படுத்தும்.
1 அல்லது 2 துண்டுகளை சாப்பிடுவது தவறு இல்லை. அதிக அளவை உட்கொள்வது என்பதை தவிர்க்க வேண்டும்.
மாதவிடாய் ரத்தப்போக்கு ஏற்படும் காலங்களில் ஹீமோகுளோபினின் அளவு குறையும் எனவே அயன் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது என்பது உடலுக்கு நல்லது. உளுந்தகளி, முட்டை, நல்லெண்ணெய் போன்றவை புரத சத்து நிறைந்தவைகளாக இருக்கின்றது .
எனவே இந்த வகையான உணவுப் பொருட்கள் உட்கொள்வது என்பது உடலுக்கு தேவையான அயன், புரதம் போன்ற சத்துக்களை தருகின்றது. எனவே இந்த வகையான உணவுகள் அந்த காலத்தை தொடர்ந்து இப்பொழுதும் உண்ணப்படுகின்றது.
குறிப்பு: மேற்கண்டவைகள் அனைத்தும் மாதவிடாய் காலங்களை நாம் கடைப்பிடித்த மற்றும் ஏன் இப்படி நடக்கின்றது, இதை செய்யலாமா என்று ஏற்படும் சந்தேகத்திற்கு பதில் அளிக்கும் விதிமான மருத்துவரின் கருத்துக்கள் அடங்கிய ஒரு தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அறிவியல் ரீதியாக முன்னேற்றம் அடைந்து வரும் இந்த உலகத்தில் இது போன்ற தெளிவு பெறவேண்டிய விஷயங்களை தகுந்த ஆலோசகரிடம் சென்று அதற்கான சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ளவேண்டும். தெரிந்தவர்கள் சொல்கிறார்கள் என்று அதன் பின்புலம் அறியாமல் கடைப்பிடிக்கக்கூடாது .
- Jenetta Roseline