Smoking kills freepik
ஹெல்த்

‘புகைப்பிடிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி உயிர்களை இழக்கிறோம்...!’

புகை பிடிக்கும் பழக்கத்தால் உலகில் ஆண்டுதோறும் 2 கோடி பேர் உயிரிழப்பதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB

புகழ்பெற்ற லான்செட் மருத்துவ இதழில் ஆய்வறிக்கை ஒன்று பிரசுரமாகியுள்ளது. அதில் புகை பழக்கம், மது அருந்துதல், உடல் பருமன், ஹெச்பிவி வைரஸ் தொற்று ஆகிய 4 காரணங்களால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கானோர் இறப்பதாகவும், இந்த மரணங்கள் அனைத்தும் தடுக்கப்படக்கூடியவை என்றும் கூறப்பட்டுள்ளது

இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய 7 நாடுகளில் புகை பிடிப்பதால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் 13 லட்சம் பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயால் மற்ற நாடுகளில் ஏற்படும் இறப்புகளை காட்டிலும், இது அதிகம் என அந்த ஆய்வு கூறுகிறது.

உலகில் ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு பெண் வீதம் கருப்பை புற்றுநோயால் இறப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. இந்தியாவிலும் தென்னாப்ரிக்காவிலும்தான் கருப்பை புற்றுநோய் மரணங்கள் அதிகம் இருப்பதாகவும், இதை தடுக்க விரிவான பரிசோதனைகள் நடத்தப்பட்டு ஹெச்பிவி தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்றும் லான்செட் இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

தடுக்கப்படக்கூடிய மரணங்கள் என்ற தலைப்பில் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையமும், லண்டனில் உள்ள குவீன்மேரி பல்கலைக்கழகம், கிங்ஸ் கல்லூரி ஆகியவையும் இணைந்து உலகளவில் இந்த ஆய்வுகளை நடத்தின.