நிபா வைரஸ் புதிய தலைமுறை
ஹெல்த்

கேரளா : நிபா வைரஸ் உறுதியான 14 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்

கேரளா கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

Jayashree A, ஜெ.நிவேதா

கேரளாவின் மலப்புரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் உறுதியாகி இருப்பதாக கேரள சுகாதாரத்துறை நேற்று (ஜூலை 20) தெரிவித்தது. சிறுவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் எனக் கூறப்பட்ட நிலையில், அங்கு அவரை தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாக அம்மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் இன்று (ஜூலை 21) சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

nipah virus

இதுகுறித்து தனியார் மருத்துவமனை முதலில், “ஏற்கெனவே ஒரு சிறுமி நிபா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சிறுவனுக்கும் அத்தகைய பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகித்தோம். அதற்காக பாதிக்கப்பட்ட சிறுவனின் உமிழ் நீரை புனேவில் உள்ள வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பினோம்” என்று கூறியது.

இந்நிலையில் புனேவில் இருந்து நேற்று அந்த அறிக்கை வந்துவிட்டதாகவும், அதில் சிறுவனுக்கு நிபா உறுதி செய்யப்பட்டதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் நேற்று இரவு கூறினார்.

இத்துடன் அமைச்சர், “வெண்டிலேட்டர் சப்போர்ட்டுடன் உள்ள அச்சிறுவன் விரைவில் அச்சிறுவன் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்படுவார். அவரிடமிருந்து யாருக்கெல்லாம் வைரஸ் பரவியிருக்கும் என்றும் விசாரித்து வருகிறோம் (contact tracing). அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தோரை தனிமைப்படுத்தி உள்ளோம். அவர்களின் மாதிரிகள் தற்போது புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றும் கூறியிருந்தார்.

வீனா ஜார்ஜ்

மேலும், “நிபா வைரஸ் அதிகம் பரவும் இடமாக இருப்பது பாண்டிக்காடு என்ற பகுதிதான் என அறியப்பட்டுள்ளது. ஆகவே அங்கு அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதை சுற்றியுள்ள 3 கி.மீ பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ளவர்கள் அனைவரும் முகக்கவசம் அணியவும், நோயுற்றவர்களை நெருங்காமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மலப்புரத்தில் நோய்த்தடுப்புக்காக கண்ட்ரோல் ரூம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் விழிப்புணர்வோடு இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. விலங்குகளால் பாதி கடிக்கப்பட்ட பழங்களை சாப்பிடவேண்டாம் என்றும் மக்களை கேட்டுக்கொள்கிறோம்” என்றும் கூறினார் அமைச்சர் வீனா ஜார்ஜ். இதற்கிடையே சிறுவன் கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை தரப்பட்ட நிலையில், இன்று கேரள ஊடகங்களிடம் பேசிய அமைச்சர், “காலை 10.50 அளவில் சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், 11.30 - 11.50 அளவில் உயிரிழந்துவிட்டார்” எனக்கூறியுள்ளார். இது அங்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நிபா வைரஸ் கண்காணிப்பை பொறுத்தவரை தற்போது 214 பேர் கேரளாவில் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவர்களில் 60 பேர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிகிறது.

வௌவால்

போபாலில் இருந்து ஒரு வௌவால் கண்காணிப்பு குழு விரைவில் பாண்டிக்காடு சென்றடைய உள்ளது. மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 30 அறைகளை தனிமைப்படுத்துதல் நோக்கத்துக்காக அம்மாநில சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

நிபா வைரஸின் அறிகுறிகள்:

கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் சுவாச நோய்த்தொற்று ஆகியவை நிபா வைரஸுக்கான அறிகுறிகள். நோய் தீவிரப்படும்போது, வலிப்பு ஏற்படலாம். இது தொடரும்பட்சத்தில் மூளை வீக்கம் ஏற்பட்டு நோயாளி கோமா நிலைக்கு தள்ளப்படலாம்.

இந்த வகை வைரஸ் பரவலிலிருந்து தற்காத்துக்கொள்ள, தடுப்பூசி இதுவரை கண்டறியப்படவில்லை. ஆகவே மக்கள் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். முகக்கவசம், அவசியம்.

முகக்கவசம்

முகக்கவசம் கட்டாயம்

பொதுவாக இந்தவகை நோய் பன்றி, வௌவால் போன்றவற்றிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும். அதனாலேயே பாதி சாப்பிட்டு வீசப்பட்ட பழங்களை உட்கொள்ள வேண்டாமென மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இருந்தபோதிலும், இது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் பரவும். அதனாலேயே முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.