Youtube File image
ஹெல்த்

தீராத பல் வலிக்கு யூ-ட்யூபில் தீர்வு தேடிய இளைஞர்... உயிரிழந்த பரிதாபம்!

பல் வலியால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், யூ-ட்யூப் பார்த்து சுயமாக சிகிச்சை மேற்கொண்டதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

சமூக ஊடகங்கள் என்பவை தற்போது பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் ஒன்று. பயன்படுத்துபவர் எம்மாதிரியான விஷயங்களை பார்க்கிறார் மற்றும் கற்றுக்கொள்கிறார் என்பதை பொறுத்து தான் சமூக ஊடகங்கள் அவருக்கு நன்மை அளிப்பதும் தீமை அளிப்பதும்.

அந்த வகையில் பல் வலிக்காக சமூக ஊடகங்களில் பரிந்துரை செய்யப்பட்ட வழிமுறைகளை பின்பற்றியதால் இளைஞர் ஒருவர் தனது உயிரைப் பறிகொடுத்த மோசமான சம்பவமொன்று சமீபத்தில் நடந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 26 வயது இளைஞர் அஜய் மஹ்தோ. இவர் ஹசாரிபாக் பகுதியில் உள்ள நூதன்நகர் காலனியில் விடுதி ஒன்றில் தங்கி போட்டித் தேர்விற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை அவருக்கு கடுமையான பல் வலி ஏற்பட்டதால், யூட்யூபில் பல் வலிக்கான தீர்வு குறித்து தேடியுள்ளார். தான் கண்ட காணொளியில் பல் வலிக்கான தீர்வு அரளிவிதை என கூறப்பட்டதை அடுத்து அந்த காணொளியில் கூறப்பட்ட வழிமுறைகளை பயன்படுத்தி தனக்குத் தானே சிகிச்சை அளித்துக் கொண்டுள்ளார்.

இதனால் உடல்நிலை மோசமானதையடுத்து ஹசாரிபாக் பிஷ்னுகர் சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார் அவர். அங்கு இளைஞர் உயிரிழந்த நிலையில் அவரது தந்தை நுனுசந்த்திடம் இளைஞரின் பழக்க வழக்கங்கள் குறித்து மருத்துவர்கள் கேட்டுள்ளனர். அப்போது இளைஞர் பல் வலி தீர்வுக்காக அரளி விதைகளை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

மருத்துவர்கள் கூறுகையில், “இவ்விதைகள் மிகவும் ஆபத்தானவை. இதனால் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம். இளைஞர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டார்” என தெரிவித்துள்ளனர்.

குறிப்பு: இணையங்களில் கூறப்படும் வழிமுறைகள் எல்லாமே ஏற்புடையதல்ல. குறிப்பாக மருத்துவத்தில், ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் வெவ்வேறு வகையான விளைவுகளை மருந்து மாத்திரைகள், மருத்துவ தன்மையுடைய உணவுகள் ஏற்படுத்தலாம். ஆகவே தலை வலிக்கான மருந்தாக இருந்தாலும் மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு பின் எடுத்துக்கொள்வதே சிறந்தது.

இணையத்தில் காணப்படும் மருத்துவ பரிந்துரைகள் யாவும், தனிமனிதர்களின் பரிந்துரைகள்தானே தவிர அங்கீகரிக்கப்பட்ட ஒன்றல்ல என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.