நமது ஊரில் தெருவுக்கு தெரு டீக்கடை, அங்கு எப்போதும் கண்டிப்பாக குறைந்தது 2 பேர் டீக்குடித்துக்கொண்டு இருப்பதை நாம் பார்த்து இருப்போம். குறிப்பாக ஆண்கள் பெரும்பாலும் டீ விரும்பிகளாக இருப்பர். உலகிலேயே பெரும்பாலானவர்களால் விரும்பப்படும் பானமாக டீ இருக்கிறது. மே 21ஆன இன்று உலக தேநீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அனைவராலும் விரும்பி அருந்தப்படுகிற டீயை அதிகமாக எடுத்துக்கொண்டால் ஏற்படும் பக்கவிளைவுகளை அறிந்துகொள்வது அவசியமாகிறது.
தேநீரின் பக்கவிளைவுகள்:
பதற்றம்: காபியை நீண்ட நாட்களுக்கு அதிகம் எடுத்துக்கொண்டால் ஒருவித நடுக்கம் ஏற்படும் என்பது பெரும்பாலானோருக்கு தெரியும். அதேபோல் டீயிலும் கஃபைன் இருக்கிறது என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். அதிக டீ, பதற்றம், ஓய்வின்மை மற்றும் சோர்வு போன்ற பல்வேறு பக்கவிளைவுகளை உருவாக்கும்.
சர்க்கார்டியன் சுழற்சியில் குழப்பம்: குறைந்த அளவு டீ குடிக்கும்போது அதிலுள்ள கஃபைன் தூக்கத்தை பாதிக்காது. ஆனால், அதிகளவு டீ குடிப்பது தூக்கத்தை தாமதப்படுத்துவதுடன் சர்க்கார்டியன் சுழற்சியிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
ஆசிட் ரிஃப்ளக்ஸ்: மிதமிஞ்சிய அளவிலோ அல்லது வெறும் வயிற்றிலோ டீயை குடித்தால் எதுக்களித்தல் (அமில பிரச்னை) ஏற்படும். இது வாய்வு, நெஞ்செரிச்சல், வயிற்று வலி போன்ற பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
கஃபைன் சார்ந்திருத்தல்: ஆரோக்கிய சீர்கேட்டை உண்டுபண்ணும் அளவிற்கு காபியை எடுத்துக்கொள்வதே கஃபைன் சார்ந்திருத்தல் என்று சொல்லப்படுகிறது. அது காபி அல்லது டீயை தொடர்ந்து அருந்துவதால் ஏற்படக்கூடிய நிலை.
தலைவலி: புத்துணர்ச்சியூட்டும் பானமாக டீ எடுத்துக்கொள்ளப்பட்டாலும், அதுவே அதிகமாகும் போது தலைவலி போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.