காபி கோப்புப
ஹெல்த்

காபி பிரியர்களா நீங்கள்...? உங்களுக்கான தினம்தான் இன்று!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி சர்வதேச காபி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தின் வரலாற்றை சற்று அறிந்து கொள்ளலாமா?

ஜெனிட்டா ரோஸ்லின்

சர்வதேச காபி தினம்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி அன்று சர்வதேச காபி தினம் கொண்டாடப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படும் இந்த தினத்தில் காபியின் வரலாறு என்ன, காபியில் உள்ள நன்மை தீமைகள் என்னென்ன போன்றவற்றை அறியலாம்...

வரலாறு

எத்தியோப்பியாவின் பழங்குடி இனத்தை சேர்ந்த ஆடு மேய்ப்பவர் ஒருவர், ஒரு நாள் மாலையில் ஆடுகளை 'கிடை'யில் அடைத்துவிட்டு, இரவில் அருகில் உள்ள குடிசையில் தூங்கியுள்ளனர். அப்போது, ஆடுகள் தூங்காமல் விளையாடியுள்ளன. காரணம், அவை ஏதோ ஒரு செடியை சாப்பிட்டுள்ளன. மறுநாள் ஆடுகளோடு சென்ற அவர் அவை முந்தைய நாள் சாப்பிட்ட செடியின் இலைகளையும், பூவையும் சுவைத்துள்ளார்.

அதன் சுவையும் மணமும் அவருக்கு அன்றைய தினம் உற்சாகம் கொடுக்கவே, அனைவருக்கும் அதை கொடுத்துள்ளார். பின்நாட்களில் அதன் பழம், கொட்டைகளிலிருந்து உருவான பொருளே நாம் இன்று குடிக்கும் காபியாக மாறியது.

காபியில் உள்ள நன்மைகள் என்ன?

  • தினமும் 3 கப் காபி (அளவான சர்க்கரையில்) குடித்தால் நீரிழிவு நோய், இதய நோய் உள்ளிட்ட நோய் ஏற்படும் அபாயங்களை 50 சதவீதம் குறைக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  • அளவுக்கு மேல் குடித்தால் இரவு தூக்கம் பாதிக்கப்படும் என ஆய்வுகள் சொல்கின்றன.

  • காபியிலிருக்கும் ஆன்டி-ஆக்சிடென்ட்டுக்கள் இதய ஆரோக்கியத்தை பராமரித்து, பக்கவாதம் ஏற்படாமல் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

  • மிதமான அளவில் காபி அருந்துபவர்களுக்கு பெருங்குடல், கல்லீரல் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்யின் அபாயம் குறையும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

  • மெடிக்கல் நியூஸ் டுடே நடத்திய ஆய்வின்படி.. அன்றாட உணவுடன் ஒரு கப் காபியை சேர்ப்பது டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை 4% குறைக்கிறது என்று தெரிவிக்கிறது.

  • காபியில் பி2 (ரைபோஃப்ளேவின்), பி5 (பாந்தோத்தேனிக் அமிலம்) மற்றும் மாங்கனீசு போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இவை ஆற்றல் உற்பத்தி, ரத்த சிவப்பணு உருவாக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு முக்கியமானவை.

  • மனநல ஆராய்ச்சியின் ஆய்வின்படி, 2-3 கப் காபி குடிப்பது மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

  • காபியைப் பருகிய 5 -10 நிமிடங்களுக்குள், அதில் உள்ள கஃபைன் மூளை நரம்புகளின் அடினோசின் (Adenosine) என்ற தாதுப்பொருளின் அளவைக் குறைப்பதுடன், டோப்பமைன் அளவைக் கூட்டுவதால், நம்மால் உற்சாக மனநிலையை அடையமுடியும்

  • கல்லீரல் நோய்களிலிருந்து ஒருவரை பாதுகாக்க காபி உதவுகிறது. மேலும் கல்லீரல் ஆரோக்கியத்தையும் காபி மேம்படுத்துகிறது.

  • காபியில் உள்ள கலவைகள் பித்த உற்பத்தியைத் தூண்டுகிறது, இது பித்தப்பையில் கொலஸ்ட்ரால் படிந்துவிடுவதை தடுக்கிறது.

அதிகமாக காபி அருந்தினால்,

  • அதிகப்படியான காபின் உட்கொள்வது தசை நடுக்கம், தலைவலி, குமட்டல், வாந்தி மற்றும் வேகமான இதயத் துடிப்பை ஏற்படுத்தும். இது நாள்படும்போது சில சமயங்களில் மரணமும் ஏற்படலாம் என்பதால், அதீத காபி நஞ்சுதான்.

  • யாராவது பல ஆண்டுகளாக அதிகளவு காபி உட்கொண்டால், அவர்களின் உடல் அதற்குப் பழகிவிடும். பின், அது நரம்பு மண்டலம், செரிமான அமைப்பு மற்றும் இதயத்தில் பக்க விளைவுகளை ஏறபடுத்தும் என்று கூறப்படுகிறது.

  • காபி குடிப்பதால் செரிமான மண்டலத்தில் உள்ள தசைகள், குறிப்பாக பெருங்குடல் பாதிக்கப்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் காபி குடிப்பவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டும் உணர்வு ஏற்படும்.

எப்படி காபி குடிப்பதில் அதிகளவு நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறதோ, அதே அளவுக்கு தீமைகளும் உள்ளன. ‘அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’தான் என்பதால், அளவாக குடிப்போம், அசத்தலாக வாழ்வோம்!