தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தக்காளி காய்ச்சல் பரவி வரும் சூழலில் மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் ஐந்து வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகளை புதிய வகை வைரஸ் தாக்கி வருகிறது. உடலில் சிறிய சிறிய சிவப்பு நிறத்திட்டுகள் போல குழந்தைகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த காய்ச்சலை தக்காளி காய்ச்சல் என அழைக்கின்றனர். இந்த தக்காளி காய்ச்சல் தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கும் பரவிவிடும் என்ற அச்சம் மக்களிடையே பரவி வருகிறது. ஏனெனில் பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்றவை கேரளாவில் இருந்து பரவிய நிலையில் இந்த காய்ச்சலும் மக்களுக்கு பரவிவிடுமோ என்று அஞ்சும் நிலை வருகிறது.
இதன் காரணமாக கேரள மாநில எல்லைகள் அனைத்திலும் தமிழ்நாடு அரசு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளது. அதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட கேரள எல்லைகளில் வாளையாறு, வேலந்தாவளம், மாங்கரை உள்ளிட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மட்டுமின்றி அரசு பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களில் வருவோரையும் அதிகாரிகள் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தி வருகின்றனர். வருவாய்த்துறையினர், சுகாதாரத் துறையினர், காவல் துறையினர் ஆகிய மூன்று துறையினரும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அறிகுறிகளுடன் ஏதேனும் குழந்தைகள் தென்பட்டால் அவர்கள் அனைவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
வாளையார் சோதனை சாவடியில் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளை தணிக்கை செய்ததாகவும், அதில் இதுவரை எந்த ஒரு குழந்தைக்கும் அறிகுறிகள் தென்படவில்லை என சுகாதாரத் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அங்கன்வாடி ஊழியர்களை இந்த வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தி உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் சமிரன் தெரிவித்துள்ளார்.
தமிழக தட்பவெப்ப சூழலில் தக்காளிக் காய்ச்சல் பாதிக்காது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் தேரணி ராஜன் விளக்கியுள்ளார். அவர் பேசுகையில், வைரஸ் பாதிப்புகள் பொதுவாக இதயம் வரை பாதிக்கும். ஆனால் தக்காளிக் காய்ச்சலில் இதுவரை அதீத பாதிப்புகள் இல்லை என அவர் கூறியுள்ளார்.