ஹெல்த்

குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு

குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு

Sinekadhara

குரங்கு அம்மை பற்றிய தேசிய நோய்த்தடுப்பு மையத்திடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைப்படி பின்வரும் பொது சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு தமிழக பொது சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

1. பின்வருவோர் குறித்த தகவல்களை சுகாதாரத்துறைக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும்: இதுவரை நாம் பார்த்திடாத புதிய வகை தடிப்புகள் உடலில் ஏற்படுவோர்,குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட அல்லது குரங்கு அம்மை இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஏதேனும் ஒரு நாட்டிற்கு கடந்த 21 நாட்களில் பயணம் செய்தவர்கள், குரங்கு அம்மை ஏற்பட்டோர் அல்லது இந்நோய் இருக்கும் அறிகுறி இருப்போருடன் தொடர்பில் இருந்தோர் குறித்து தகவலறிந்தால் சுகாதாரத்துறைக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

2. சந்தேகத்திற்கிடமான அனைத்து நோயாளிகளும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

3. அத்தகைய நோயாளிகள் அனைவரும் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் மாவட்ட கண்காணிப்பு அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

4. அத்தகைய நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் போது பின்பற்ற வேண்டிய அனைத்து தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும்.

5. சந்தேகத்திற்கிடமான பட்சத்தில் குரங்கு அம்மை பரிசோதனைக்காக இரத்தம், சளி, ,கொப்புள திரவம் உள்ளிட்டவை என்ஐவி புனேக்கு அனுப்பப்படும்.

6. யாருக்கேனும் குரங்கு அம்மை கண்டறியப்பட்டால், கடந்த 21 நாட்களில் நோயாளியின் தொடர்புகளை அடையாளம் காண, தொடர்புத் தடமறிதல் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்.

ஐரோப்பா, கனடா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.