நுரையீரல் குறைப்பாடு முகநூல்
ஹெல்த்

கொரோனாவிற்கு பிறகு அதிகரித்த நீண்ட கால ’நுரையீரல்’ பிரச்சனைகள்; ஷாக் கொடுக்கும் ஆய்வு முடிவுகள்!

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பிறகு, நுரையீரல் குறைப்பாடுகளால் கணிசமான அளவு இந்தியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஜெனிட்டா ரோஸ்லின்

உலகையே இரண்டு வருடங்களுக்கு ஆட்டிபடைத்ததுதான் கொரோனோ தொற்று. மனித குலத்தையே இயங்கவிடாமல் வீடுகளில் முடக்கிவைத்தது. பல உயிர்களை குடித்து தான் அடங்கியது. 2020 மற்றும் 21 ஆகிய ஆண்டுகளில் கொரோனாவின் தாக்கம் பெரிய அளவில் இருந்தது. கொரோனா தொற்றின் தாக்கம் தணிந்து இருந்தாலும் தற்போது கொரோனாவிற்கு பிறகான தாக்கம் பெரிய அளவில் பேசப்படுகிறது. அதன் விளைவாக பல நோய்கள் ஏற்படுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, சமீப காலமாக ஏற்படும் இளம்வயது மாரடைப்பு மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் என்று பேசப்பட்டது. ஆனால், இது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வின்படி, கடுமையான கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடின உழைப்பு, ஓட்டம் அல்லது அதிகப்படியான உடற்பயிற்சியைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறி இருந்தார். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தணிந்த பின்னும் மக்கள் மத்தியில் இன்னும் அந்த அச்சம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் ஆய்வு முடிவு ஒன்று அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பிறகு, நுரையீரல் குறைப்பாடுகளால் கணிசமான அளவு இந்தியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

வேலூரில் அமைந்துள்ள கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜில் (CMC) நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியர்களில் நுரையீரலின் செயல்பாடு மற்றும் வாழ்க்கைத் தரத்தில் கோவிட் -1 இன் தாக்கம் குறித்து கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டது.

தொற்றின் முதல் அலையின் போது 207 நபர்களை கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் PLOS குளோபல் பப்ளிக் ஹெல்த் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்த மீண்ட நபர்களை இரண்டு மாதங்களுக்கு பிறகு முழுமையான நுரையீரல் பரிசோதனை, 6 நிமிட நடைப்பயிற்சி சோதனை, இரத்தப்பரிசோதனை போன்ற பரிசோதனைகள் எடுக்கப்பட்டது. இந்த ஆய்வு, கொரோனாவால் அதிகளவு, குறைந்த அளவு, நடுத்தர அளவு பாதிப்பட்டு மீண்ட நபர்களிடமிருந்து எடுக்கப்பட்டது.

மேலும் மிகவும் உணர்திறன்வாய்ந்த நுரையீரல் செயல்பாட்டு பரிசோதனையும் (DLCO) செய்யப்பட்டது. இதன் மூலம், சுவாசிக்கப்படும் காற்றிலிருந்து ஆக்ஸிஜனை இரத்த ஓட்டத்திற்கு மாற்றும் திறன் அளவிடப்படுகிறது.

நடத்தப்பட்ட இப்பரிசோதனைகளின் அடிப்படியில், 44% சதவீதம் பேருக்கு ஆக்ஸிஜன் மாற்றம் செய்யும் திறன் பாதிக்கப்பட்டும், 35% பேர் கட்டுப்படுத்தக்கூடிய நுரையீரல் குறைப்பாட்டினாலும், 8.3 சதவீதம் பேர் நுரையீரல் அடைப்பு குறைப்படாலும் பாதிக்கப்பட்டுளனர் என்று தெரியவந்துள்ளது.

இதன்மூலம் ஐரோப்பா , சீனா ஆகிய நாடுகளை காட்டிலும் இந்தியர்களே அதிகஅளவு பாதிப்படைகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.மேலும் இந்த பாதிப்பு ஒரு சிலருக்கு ஒரு வருடம் வரையும் மற்றவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.