ஹெல்த்

முழுவதுமாக குணமடைந்தார் முதல் குரங்கம்மை தொற்று பாதித்த நபர்.. இன்று வீடு திரும்புகிறார்!

முழுவதுமாக குணமடைந்தார் முதல் குரங்கம்மை தொற்று பாதித்த நபர்.. இன்று வீடு திரும்புகிறார்!

Sinekadhara

இந்தியாவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த 35 வயதான நபர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஜூலை 12ஆம் தேதி நாடு திரும்பினார். அவருக்கு குரங்கம்மை தொற்று அறிகுறிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஜூலை 14ஆம் தேதி திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் குணமடைந்துவிட்டதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘’இரண்டுமுறை மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. அந்த நோயாளி தற்போது உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கிறார். சருமத்தின்மீது உருவான தோல் புடைப்புகள் முழுவதுமான குணமாகிவிட்டது. இன்று அவர் வீடு திரும்புகிறார்’’ என்று கூறியுள்ளார்.

இதேபோல், குரங்கம்மை அறிகுறிகள் தென்பட்ட மற்ற இருவரின் உடல்நிலையும் தற்போது குணமடைந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் முதல் குரங்கம்மை பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்டதை அடுத்து, கேரள அரசு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறது.

குரங்கு அம்மை தொற்று என்பது ஒரு வைரல் ஜூனோசிஸ். அதாவது விலஙுகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வைரஸ் என்கிறது உலக சுகாதார நிறுவனம். பெரியம்மையைப் போன்றே இருக்கும் இதன் அறிகுறிகள். மருத்துவரீதியாக இதன் வீரியம் குறைவுதான். 1980 இல் பெரியம்மை ஒழிப்புக்குப் பிறகு பெரியம்மை தடுப்பூசி நிறுத்தப்பட்டது. தற்போது இந்த குரங்கம்மை பொது சுகாதாரத்திற்கு ஊறுவிளைவிக்கும் மிக முக்கியமான ஆர்த்தோபாக்ஸ் வைரஸாக உருவெடுத்துள்ளது.