காதலிப்பவர்கள் தங்களுடைய காதலிக்கோ, காதலனுக்கோ அவர்களது கஷ்டமான சூழ்நிலையின் பொது உதவி செய்ய வேண்டும் என நினைப்பார்கள். அது பண உதவியாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. மன ரீதியாக உறுதுணையாக ஆதரவாக இருப்பதுவே பேருதவியாக இருக்கும்.
ஏனெனில் அவர்களது பிரச்னையை முழுமையாக தீர்க்க முடியாவிட்டாலும் ஒரு ஆறுதலுக்கேனும் உடன் இருந்தால் மனநிறைவாக இருக்கும். அப்படியான சூழலில் அவர்களை எப்படியாவது தேற்றிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதனை எப்படி செய்வது என தெரியாமல் விழிப்பிதுங்கி போயிருப்பவர்களும் இருக்கிறார்கள்.
இந்த மாதிரியான குழப்பமான சூழலை தீர்க்கவே உறவு சிக்கலை தீர்க்கும் ஆலோசகர் லூசில் ஷாகில்டன் ஒரு சிறப்பான தரவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அது மன அழுத்தத்தில் இருக்கும் உங்களது இணையருக்கு எப்படியெல்லாம் ஆறுதலாக இருக்கலாம் என்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில்,
அமைதியாக இருத்தல்:
பிரச்னைகள் உருவாகும் நேரத்தில் அமைதியை கடைப்பிடித்தல் நல்லது. அந்த சமயத்திலும் பரபரப்பாக இருந்தால் அது உடன் இருக்கும் இணையரையும் பாதிக்கச் செய்யும். ஸ்ட்ரெஸாக இருக்கும்போது அமைதியாக இருந்தால் இருவரும் சேர்ந்து கலந்தாலோசித்து ஒரு நல்ல முடிவெடுக்க ஏதுவாக அமையும்.
காது கொடுத்து கேட்பது:
உங்களது இணையரின் பிரச்னைகள் என்ன என்பதை காது கொடுத்து கேட்டாலே முக்கால்வாசி பிரச்னைகள், மன அழுத்தங்கள் அகலும். அதே நேரத்தில் உங்கள் காதலரோ/காதலியோ ஏதேனும் உங்களிடம் சொல்ல முற்பட்டால் அதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுங்கள். அது இருவருக்குமிடையே நல்ல புரிதலை ஏற்படுத்தும்.
பிரச்னைகளை ஏற்பது:
அவர்களது பிரச்னைகளை கூறும் போது அதனை உண்ணிப்பாக கவனித்து அதற்கான பதிலை புரிந்து, தெளிந்து கொடுங்கள். அவர்கள் கூறுவதை கேட்பதோடு மட்டுமல்லாமல் நீங்கள் உணர்கிறீர்கள் என்பதை புரிய வையுங்கள்.
அடுத்தது என்ன?
மன அழுத்தத்தில் இருக்கும் இணையரின் பிரச்னையை எப்படி தீர்க்கலாம் என்பதை கேளுங்கள். அவர்களை ரிலாக்ஸாக உணர வைக்கும் உதவிகளை செய்யுங்கள். அவர்களது மனதை லேசாக்க டீ, காஃபி போட்டு கொடுப்பது, வெளியே சென்று ஷாப்பிங் செய்வது, தலைக்கு மசாஜ் செய்வது, மெல்லிசையை கேட்கச் செய்வது, சந்தோஷமாக வைத்திருக்க முற்படலாம்.
தீர்வு காண உதவுவது:
இணையரின் பிரச்னையை என்னவென்று கேட்டறிந்த பிறகு, அவர்களின் டென்ஷனை குறைக்க, அதனை தீர்ப்பதற்கான வழி இருந்தால் அதற்கு உதவுங்கள்.
இவ்வாறு லூசில் ஷாகில்டன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், காதலனாகவோ, காதலியாகவோ இருப்பது வெறும் காதலிப்பதற்காக மட்டுமே அல்லாமல், அவர்களது நல்லவை , கெட்டவைகளிலும் பங்கெடுத்து உங்களது பங்கையும் செலுத்துவதே வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு நல்லதாக இருக்கும்.
எல்லா சமயங்களிலும் அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய நீங்க உளவியல் மருத்துவரோ அல்லது மூளையை படிக்கும் வித்தகரோ இல்லை என்பதை உணர்ந்து, அவர்களுக்கான தேவை என்ன என்பதை கேட்டறிந்து அதற்கு மதிப்பளித்து செயல்படுவதே சாலச்சிறந்தது என்கிறார்.