கோடை வெயில்  முகநூல்
ஹெல்த்

கோடை காலத்தை எவ்வாறு கையாளலாம்? சித்த மருத்துவர் சொல்வது என்ன?

கோடை காலத்தை எவ்வாறு கையாளலாம். எந்த உணவுகளை உட்கொள்ளலாம் என்று விளக்குகிறார் சித்த மருத்துவர் காமராஜ்.

ஜெனிட்டா ரோஸ்லின்

கோடை கால வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கு வெயிலுக்கான சிவப்பு நிற எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதிகரித்து வரும் வெயிலால், சிறுநீரக பிரச்னை, சருமப்பிரச்னை என தலை முதல் கால் வரை உருவாகும் புதுப்புது பிரச்னைகளுக்கு பஞ்சமில்லை.

இந்நிலையில் கோடை வெயிலை எவ்வாறு கையாள வேண்டும், எவ்வகையான உணவுகளை உட்கொள்ளலாம் என்று விளக்குகிறார் சித்த மருத்துவர் காமராஜ்.

என்ன பாதிப்பு?

“கோடை காலத்தில் வியர்க்குரு, கட்டி, கொப்பளங்கள் அதிகமாக வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். மேலும் ஒரு சிலருக்கு மலக்கட்டு பிரச்னை, மூலம் பிரச்னை, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

இதற்கு முக்கிய காரணமே உடலில் எதிர்ப்பு சக்தி குறைவதுதான்.

எதிர்ப்பு சக்தி குறைவதற்கான காரணம்:

உடலிருந்து நிறைய நீர்ச்சத்து வெளியேறும், தண்ணீர் குறைவாக அருந்துவது, தூக்கம் குறைவாக இருப்பது போன்றவைதான் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு காரணம்.

ஆகவே, சரியான உணவை, சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வது அவசியம். இதில் மாற்றம் ஏற்படும் பொழுதுதான் உடலில் நோய்கள் வர காரணமாக அமைகிறது.

எந்தவகையான உணவுகளை எடுத்து கொள்ளலாம்?

பழைய சோறு, நீராகரம் எடுத்துக்கொள்ளலாம். இதை நம் முன்னோர்கள் வழிவழியாக எடுத்து பயன்பெற்றுள்ளனர்.

யார் சாப்பிட கூடாது?

சைனஸ் தொந்தரவு, ஆஸ்துமா உள்ளவர்கள், காய்ச்சல் - சளி ஏற்பட்டுள்ள சமயங்களில் பழைய சோறு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களான வெள்ளரிக்காய், தர்பூசணி, ஆரஞ்சு, சாத்துக்குடி, இளநீர், பதணீர், நுங்கு இதை உண்ணலாம். நீர் மோர் அதிகம் அருந்த வேண்டும்.

மண்பானையில் தண்ணீர் ஊற்றி 2 எலுமிச்சை பழங்களை அதில் போட்டு அருந்தாலாம். பானை நீர் உடற்சூட்டை தணிக்கும், மலக்கட்டு பிரச்சை நீக்கும், குடல் புண் வராது, செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தாது” என்றார்.