இந்திய சமையலறையில் இருக்கும் இயற்கை மருந்துகள் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். மஞ்சள், கிராம்பு, மிளகு, சோம்பு என அனைத்திலும் மருத்துவகுணங்கள் நிரம்பியுள்ளன. இந்தியர்களின் பிரிய உணவான பிரியாணியில் இருக்கும் பிரியாணி இலையை வாசத்திற்காக மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் அதிலுள்ள மருத்துவகுணம் பற்றி பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லை.
பிரியாணி இலையில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், வைட்டமின் ஏ, சி, பி6, இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் பல சத்துகள் நிரம்பியுள்ளன. மேலும் இதில் இரைப்பை - குடல் பாதைக்கு நன்மைப்பயக்கும் சத்துகளும் நிரம்பியுள்ளன. பிரியாணி இலையில் IBS என்று சொல்லக்கூடிய குடல்நோய் எரிச்சலை குணமாக்கும் மருத்துவகுணங்கள் நிரம்பியுள்ளன. மேலும் மன அழுத்தத்தை கொடுக்கும் ஹார்மோன்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்தும் வல்லமை பிரியாணி இலைக்கு உண்டு. அழற்சிக்கு எதிர்க்கும் குணங்களும் இதில் உண்டு.
பிரியாணி இலை டீயானது செரிமான சக்தியை அதிகரித்து, ஊட்டச்சத்துகள் உடலில் சேர உதவிபுரிகிறது. மேலும் இந்த டீயில் சேர்க்கும் பட்டையில் மெட்டபாலிசம் மற்றும் செரிமான சக்தியை அதிகரிக்கும் கூறுகள் நிறைந்துள்ளன. மேலும் இது உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
பிரியாணி இலை டீ செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
பிரியாணி இலை - பெரியது 1
பட்டை - 1 அல்லது 1/2 டீஸ்பூன் பொடி
தண்ணீர் - 2 கப்
எலுமிச்சைச் சாறு மற்றும் தேனை வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம்.
செய்முறை
தண்ணீரில் பிரியாணி இலை மற்றும் பட்டையைச் சேர்த்து 6 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அடுப்பை அணைத்துவிட்டு 3-4 நிமிடங்கள் அப்படியே மூடிவைக்கவும். கப்பில் இந்த தண்ணீரை வடிகட்டி, தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிக்கவும். இந்த டீயை தினமும் குடித்துவர உடல் ஆரோக்கியம் மேம்படும்.