ஹெல்த்

வெயிலின் தாக்கத்தால் ஹீட் ஸ்ட்ரோக், டயரியா நோய்கள்.. மருத்துவர்கள் கொடுக்கும் அறிவுரை

வெயிலின் தாக்கத்தால் ஹீட் ஸ்ட்ரோக், டயரியா நோய்கள்.. மருத்துவர்கள் கொடுக்கும் அறிவுரை

webteam

வெயிலின் தாக்கத்தால் ஹீட் ஸ்ட்ரோக்... முன்னெச்சரிக்கையுடன் இருக்க மருத்துவர்கள் அறிவுரை....

கோடை காலம் துவங்கி உள்ளதால் வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் டயரியா நோய்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உலக வெப்பமயமாதலால் ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் அளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளை முன்கூட்டியே தடுக்கும் விதமாக பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதிக வெயிலுக்கு செல்லக்கூடியவர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக், டைரியா, சின்னம்மை போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் உடலில் நீர்ச்சத்து குறைதல் இதனுடன் உப்பு சத்து குறைதல் உள்ளிட்ட காரணங்களால் இதய நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

கோடை காலத்தில் அதிக வெயிலால் ஏற்படும் உபாதைகளை தடுக்க கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட உப்பு சத்துக்கள் அடங்கிய பழங்கள் இளநீர், தர்பூசணி உள்ளிட்ட உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதிக வியர்வை வெளியேறுதல், வெப்ப சோர்வு, வெப்ப வாதம் என மூன்றாக பிரிக்கக்கூடிய கோடைகால உடல் உபாதைகளில் முதல் இரண்டு வகைகளால் எந்த பிரச்சனை ஏற்படுவதில்லை எனவும் வெப்ப வாதத்தால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் உடலில் நீர்ச்சத்து இழந்து மூளையில் வெப்பம் அதிகரிக்கும் எனவும் கூறுகின்றனர்.

வியர்வை சுரப்பிகள் தாக்கப்படுவதால் இந்த நோய் ஏற்படுவதற்கு காரணமாக அமைவதாகவும், மூளை நரம்புகள் பாதிக்கப்படுவதால் மூளை செயல் இழக்கும் அபாயம் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. தொடர்ந்து பழங்கள், எலுமிச்சை பழச்சாறு, இளநீர் உப்பு கரைசல் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.