செல்வ விநாயகம் முகநூல்
ஹெல்த்

தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் பரவலா? - பொது சுகாதாரத்துறை இயக்குநர் சொல்வதென்ன?

ஜெனிட்டா ரோஸ்லின்

கேரளாவில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாக, தமிழ்நாட்டில் தீவிர கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் பறவை காய்ச்சல் என்றாலே மிகவும் ஆபத்தானதாக கருத்தப்பட்ட நிலையில், இப்பொழுது சீசனுக்கு சீசன் வருவது போல அடிக்கடி வர தொடங்கிவிட்டது. இருப்பினும், இதுகுறித்த அச்சம் தீர்ந்தபாடில்லை.

சமீபத்தில்கூட அமெரிக்காவில் உள்ள 8 மாகாணங்களில் இருக்கும் 29 பண்ணைகளில் உள்ள கோழிகள் மற்றும் மாடுகளுக்கும் பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பசு மாடுகளில் இருந்து கறக்கப்படும் பாலில் பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் ஹெச்5என்1 வைரஸ் இருப்பது கண்டறிப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் உலக சுகாதார நிறுவனம் பச்சையாக பாலை உட்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டிலும் பறவை காய்ச்சலை குறித்த அச்சம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதா? என்பது குறித்து விளக்குகிறார் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம்.

அவர் கூறுகையில், “இதுவரை தமிழ்நாட்டில் பறவைகளுக்கு இவ்வகை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதேநேரம், மனிதர்களுக்கு எதாவது பாதிப்பு உள்ளதா என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை யாருக்கும் பாதிப்பு கண்டறியப்படவில்லை.

எப்படி வரும்?

பறவை காய்ச்சல் என்பது சுவாச மண்டலத்தில் ஏற்படும் பாதிப்புதான். இதில் பாதிக்கப்பட்ட மனிதர்களின் சுவாச மண்டலத்தில் இருந்து வெளிப்படும் நீர்த்துளிகள் மூலம் பரவலாம், அல்லது உமிழ்நீர், எச்சில் ,சிறுநீர், பயன்படுத்திய பொருட்கள் வழியாக வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களை முற்றிலும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

இதுவும் சாதாரண வைரஸ் தொற்று மாதிரிதான். இது பரவும்தன்மை கொண்டது என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்களை உடல் நலம் பெற செய்யலாம்.

அறிகுறிகள்:

மற்ற வைரஸ் தொற்றுபோலதான் இது இருக்கும். இதனால், காய்ச்சல், இருமல், சளி உண்டாகும். காய்ச்சல் தீவிரம் அடையும் போதுதான் சுவாச மண்டல பிரச்னையும், நிமோனியா போன்ற பாதிப்புகளும் உண்டாகும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உண்ணும் உணவுகளில் அளவோடும், சுகாதாரத்தோடும் உண்டால் வரும்முன் காக்கலாம்.