ஹெல்த்

சைலன்ட் கில்லராகும் சிறுநீரக தொற்று.. எப்படி கட்டுப்படுத்தலாம்? முக்கிய வழிமுறைகள் இதோ!

சைலன்ட் கில்லராகும் சிறுநீரக தொற்று.. எப்படி கட்டுப்படுத்தலாம்? முக்கிய வழிமுறைகள் இதோ!

JananiGovindhan

சிறுநீரக கோளாறு தொடர்பான நோய்கள் தற்போது சைலன்ட் கில்லராகவே இருக்கின்றன. கிட்னி தொற்றுகளை சரிசெய்யாவிட்டால் வாழ்க்கையில் எக்கச்சக்கமான உடல்நல பாதிப்புகளை எதிர்கொள்ளவே நேரிடும். சிறுநீரகம் தொடர்பான தொற்றுகளை, நோய்களை தடுக்கவும், வந்தால் கட்டுப்படுத்தவும் அதன் அபாயத்தை எட்டாமல் குறைப்பதற்கும் பல வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை காணலாம். ஏனெனில் மார்ச் 9ம் தேதியான இன்று உலக சிறுநீரக தினம் கடைப்பிடிக்கப்படுக்கிறது.

சுறுசுறுப்பாகவும், ஃபிட்டாக இருத்தல்:

உடல்நல ஆரோக்கியத்தை பேணி காக்க எடை பராமரிப்பை முறையாக கண்காணிக்க வேண்டும். இதனை செய்வதன் மூலம் ரத்த அழுத்தம் குறைவதோடு, நாள்பட்ட சிறுநீரக நோயால் வரும் அபாயத்தை குறைக்க உதவும்.

“சிறுநீரக ஆரோக்கியத்துக்கான பயணம்” என்ற கருத்தாக்கத்தை முன்வைத்து உலகம் முழுக்க பிரபலங்கள், தொழில் வல்லுநர்கள், பொதுமக்கள் என பலரும் பொதுப்பகுதியில் நடைபயிற்சி, ஜாக்கிங், வாக்கிங், சைக்கிளிங் போன்ற ஆரோக்கிய பயிற்சிகளில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் வழக்கம். இதுப்போன்ற நிகழ்வுகளில் பங்கேற்று சிறுநீரக நோயாளிகள் தெளிவு பெறலாம்.

ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல்:

சிறந்த உடல் எடையை பராமரிக்க, ரத்த அழுத்தத்தை குறைக்க, நீரிழிவு, இதய நோய் மற்றும் சிறுநீரக கோளாறு தொடர்புடைய பிற தொற்றுகளை கட்டுப்படுத்த முக்கிய காரணியாக இருப்பது ஆரோக்கியமான உணவு முறையே.

பரிந்துரைக்கப்பட்ட சோடியல் அளவை உட்கொள்ள வேண்டும். அதாவது நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 கிராம் உப்பையே உட்கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை உட்கொள்வதை தவிர்த்துவிட்டு, வீட்டில் நீங்களே தயாரிக்கும் உணவில் குறைவான உப்பை சேர்ப்பதன் மூலம் நோய்த்தொற்றுகள் கட்டுப்பாடாக இருக்கும்.

சர்க்கரை அளவை சரிபார்க்கவும்:

தங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கும் என்றே பாதிக்கும் மேலானோருக்கு தெரிவதே இல்லை. எனவே பொதுவான முழு உடற்பரிசோதனையை செய்து பார்த்துக்கொள்வது நலம். குறிப்பாக நடுத்தர வயதை நெருங்குவோர் அல்லது அதற்கு மேற்பட்டோர் ரத்த சர்க்கரை அளவை சரிபார்த்துக் கொள்வது அதி அவசியம்.

ஏனெனில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கும் சிறுநீரக தொற்று ஏற்படுகிறது. ஆனால் நீரிழிவு நோய் நன்கு கட்டுப்படுத்தப்பட்டால் சிறுநீரக தொற்றையும் தடுக்கவோ கட்டுப்படுத்தவும் முடியும். ஆகையால் முறையான பரிசோதனைகள் மூலம் கிட்னி செயல்பாட்டை சரிபார்க்கவும்.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும்:

நீரிழிவு நோயை போல தங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதே தெரியாமல் பலரும் இருக்கிறார்கள். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அது சிறுநீரகத்தை சேதப்படுத்தும். இதுபோக சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், கார்டியோ வாஸ்குலர் போன்ற பல பாதிப்புகளையும் உண்டாக்கும். ஆகையால் இத்தனை நோய்களுக்குள் செல்வதற்கு பதில் ரத்த அழுத்தம் இருப்பின் கட்டாயம் கட்டுப்படுத்துவதால் அபாயத்தை குறைக்கலாம்.

புகைப்பிடிப்பதை தவிர்க்கவும்:

புகைப்பிடிப்பதால் சிறுநீரகங்களுக்கான ரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் சாதாரணமாக செயல்படும் திறனை சிறுநீரகங்கள் அடைகிறது. இந்த புகைப்பிடிக்கும் பழக்கத்தால் சிறுநீரக புற்றுநோயின் அபாயம் சுமார் 50 சதவிகிதம் வரை அதிகரிக்கிறது.

அடிக்கடி வலி நிவாரணி மாத்திரை கூடாது:

Non-steroidal anti-inflammatory என சொல்லக் கூடிய வலி நிவாரணி மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் கிட்னி செயல்பாடு பாதிப்படையும். குறிப்பாக கிட்னி தொடர்பான தொற்று குறைந்த அல்லது அதிகளவில் இருக்கும் போது வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டால் அது மேலும் சிறுநீரகத்துக்கே தீங்கு விளைவிக்கும். சந்தேகம் இருப்பின் மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.

சிறுநீரக நோய் இருப்பதை எப்படி தெரிந்துக்கொள்ளலாம்?

நீரிழிவு நோய், இதய பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் குடும்ப வரலாறு கொண்ட சிறுநீரக தொற்று இவற்றில் ஏதேனும் இருந்தாலோ அல்லது இவற்றில் ஏதேனும் ஒரு பாதிப்பு இருந்தாலோ சிறுநீரக கோளாறு பற்றி பரிசோதனை செய்து மருத்துவம் பெற்றுக்கொள்வது சிறந்த நடைமுறையாகும்.