திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையில் உள்ள ஆண்கள் சிகிச்சை பிரிவு, பெண்கள் சிகிச்சை பிரிவு, ஆண்கள் - பெண்கள் கழிவறைகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு என அனைத்தையும் பார்வையிட்டு, நோயாளிகளிடம் ‘மருத்துவமனையில் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றதா? சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறதா?’ என்பது குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் மருத்துவமனையில் உள்ள ஆண்கள் கழிவறை மற்றும் பெண்கள் கழிவறையை சுகாதாரமின்றி காணப்பட்டதை கண்டு கழிவறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு கோபத்துடன் உத்தரவிட்டார்.
மேலும் நோயாளிகளுக்கு சரியாக தலையணை வழங்கப்படாதது குறித்து வருத்தம் தெரிவித்த அவர், நோயாளிகளுக்கு சுத்தமான தலையணை மற்றும் பெட்ஷீட் வழங்கவும் மருத்துவமனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, இது குறித்து கூறுகையில் “அரசின் சார்பில் புதிதாகத் தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொன்றாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டதில் மருத்துவமனை 850 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. விரைவில் மருத்துவமனையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய ஆபரேஷன் சென்டர் தொடங்கப்பட உள்ளது.
மருத்துவர்களுக்கான கலந்தாய்வு சமீபத்தில் நடைபெற்றது. அதன் அடிப்படையில் இந்த மாதத்திற்குள்ளாக மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நிரப்பப்பட உள்ளனர். ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவர்கள், மெடிக்கல் போர்டு மூலமாக நியமிக்கப்பட உள்ளனர்.
செவிலியர்களின் பற்றாக்குறையை அரசு படிப்படியாக குறைக்க வழிவகை செய்துள்ளது. அடுத்த 4 மாதத்திற்குள் மருத்துவமனையில் செவிலியர்கள் நிரப்பப்பட்டு பற்றாக்குறை நீக்கப்படும்.
தமிழகமானது மருத்துவ துறையில் சிறந்து விளங்குகிறது. மாவட்ட மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் ஒத்துழைப்பின் காரணமாக மேலும் சிகிச்சை மேம்பட வாய்ப்புள்ளது.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உபகரணங்கள் குறைவாகத்தான் உள்ளது. புதிதாக உபகரணங்கள் கொடுப்பதற்கு அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே ஒன்றிலிருந்து இரண்டு வருடங்களில் மருத்துவமனைகளில் கூடுதல் உபகரணங்கள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 15 குறைபாடுகள் உள்ளது. இது குறித்து மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
500 கோடியில் உபகரணங்கள் வாங்க அரசு சார்பில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மருத்துவமனைகளில் தேவையான உபகரணங்களை வாங்குவதற்கு தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் உலக வங்கியின் நிதியை கேட்டு பெறப்பட்டு உபகரணங்கள் விரைவில் வாங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மருத்துவமனையில் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் பெட்ஷீட் சுத்தமாகவும், உணவு வகைகள் சுத்தமாக கொடுக்கப்படுவதுடன் பாத்ரூம் மற்றும் டாய்லெட் சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஆகவே மருத்துவமனைகளில் சுத்தத்தை சரியாக பராமரிக்காத ஒப்பந்த நிறுவனம் மாற்றப்படும்.
மழையின் காரணமாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெங்குவின் தாக்கம் அதிகமாக இருக்கும். உள்ளாட்சி அமைப்புகள் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பொது மக்கள் ஆகிய மூவரும் இணைந்து செயல்பட்டால் டெங்குவை தடுக்க முடியும் .
தமிழகம் முழுவதும் இன்றளவில் நாள்தோறும் 300 முதல் 400 நபர்களுக்கு டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவர்கள், செவியிலியர்கள், நோயாளிகள் அனைவரும் மனிதாபிமான முறையில் நடந்து கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அழுத்தத்தில் பணிபுரிகின்றனர் ” என்று தெரிவித்தார்.