ஹெல்த்

தற்கொலை என்ற தவறான முடிவுகளை தடுக்க பெற்றோர் செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் ஆலோசனை

தற்கொலை என்ற தவறான முடிவுகளை தடுக்க பெற்றோர் செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் ஆலோசனை

Sinekadhara

சிறு தோல்விகளுக்கும் தற்கொலை என்ற தவறான முடிவுகளை சில மாணவர்கள் மேற்கொள்ளும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க பெற்றோர் செய்ய வேண்டியது என்ன? என்று மனநல வல்லுநர்களின் கருத்துக்களைப் பார்க்கலாம். 

மருத்துவம் படித்து சேவை செய்யும் உயர்ந்த எண்ணம் சரியே. அதற்கான வாய்ப்புகள் குறைந்தால், அத்துடன் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை என்பதை மாணவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அடுத்த வாய்ப்புகளை நோக்கி நகர வேண்டும். அந்த மனப்பக்குவம் இல்லாத சில மாணவர்கள் எடுத்த தவறான முடிவை அடுத்து, இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியுள்ள 1 லட்சத்து 12 ஆயிரம் மாணவர்களின் எண்களை திரட்டியுள்ளது தமிழக மருத்துவத்துறை. இந்த மாணவர்களை தொடர்புகொண்டு மனநல ஆலோசகர்கள் மூலம் வழிகாட்டுதல்களை வழங்கும் பணியில் 333 மனநல ஆலோசகர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏமாற்றங்கள் வாழ்வின் பகுதி என்பதை மாணவர்களுக்கு பெற்றோர் உணர்த்தவேண்டும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநர் பூர்ண சந்திரிகா கூறுகையில், ’’பிள்ளைகளின் மனநிலையை கவனித்து, வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுடன் பேச வேண்டும். இந்த உலகில் கற்கவும், வெல்லவும் ஆயிரக்கணக்கான படிப்புகளும், துறைகளும் உள்ளது என்பதை புரிய வைக்க வேண்டும். மனித வாழ்வு தோல்விகளால் நிறைந்தது என்ற உண்மையை குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றுக் கொடுக்க வேண்டியதும் முக்கியமானது. தோல்விகளில் இருந்து தன்னை மீட்டெடுத்து தொடர்ந்து ஓட வேண்டிய வாழ்க்கைப்பாடம்தான் மாணவர்களுக்கு தற்போதைய சூழலில் அதிகம் தேவைப்படுகிறது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்’’ என்று கூறுகிறார்.