தற்போதுள்ள அவசர வாழ்க்கை முறையில் பெரும்பாலானோருக்கு சருமப் பிரச்னை, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது. 30 வயதை தொட்டுவிட்டாலே முடி உதிர்தல் பிரச்னை தலைதூக்கிவிடுகிறது.
அதற்கென பிரத்யேக சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை எடுத்துக்கொண்டாலும், அது நிரந்தர தீர்வாக இருக்காது. இருக்கும் வேலைப்பளு மற்றும் அவசர வாழ்க்கை முறையில் தினசரி வாழ்க்கையில் சில பழக்கவழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் முடி கொட்டுதல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
ஆயில் மசாஜ்
முடி நன்றாக வளர வேண்டும் என்றால் கண்டிப்பாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கவேண்டும். தலை வறண்டுபோகும்போது முடி உதிர்தல், வெடித்தல் மற்றும் பொடுகுத் தொல்லை ஏற்படும். தலைக்கு எண்ணெய் தேய்க்கும்போது, முடியின் வேரிலிருந்து நுனிவரை எண்ணெய் படும்படி நன்கு தேய்த்து, வேர்க்கால்களை விரல் நுனிகளால் மெதுவாக மசாஜ் செய்யவேண்டும். பளபளப்பான முடியைப் பெற குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை இப்படி தலைக்கு எண்ணெய் தேய்த்து கெமிக்கல் குறைந்த ஷாம்புவால் சுத்தமாகக் கழுவ வேண்டும்.
ஆறுமாதங்களுக்கு ஒருமுறை முடிவெட்ட வேண்டும்
சிலர் முடியை வெட்டவேண்டும் என்று கூறினாலே கோபப்படுவார்கள். நீளமான முடியைப் பெறவேண்டும் என்று வெட்டாமல் அப்படியே வைத்திருப்பார்கள். ஆனால் உண்மையில் வெட்டாமலே வைத்திருக்கும் முடி வளராது. காரணம், முடி நுனியில் இறந்த செல்கள் சேர்ந்துவிடும் அல்லது வெடிப்பு ஏற்படும். எனவே வளர்ச்சி நின்றுபோய்விடும். எனவே ஆறுமாதங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக முடி நுனியை சிறிது வெட்டிவிட வேண்டும். இதனால் முடிவளர்ச்சி அதிகரிக்கும்.
ஈரமான முடியை சீவக்கூடாது
ஈரமான முடியை சீப்பால் சீவுவதை பழக்கமாக வைத்திருப்பவர்கள் அதை உடனே நிறுத்தவேண்டும். ஈரமாக இருக்கும் முடி எளிதில் உடைந்துவிடும். அதை இழுக்கும்போது வேருடன் வந்துவிடும். எனவே முடி சேதமடையாமல் இருக்க, ஈரமுடியை சீவுவதை நிறுத்தவேண்டும்.
சூடான எதையும் முடிமீது பயன்படுத்தக்கூடாது
சிலருக்கு தினமும், ஸ்ட்ரெய்ட்னர், ஹேர் ட்ரையர் பயன்படுத்தும் பழக்கம் இருக்கும். இது முடிக்கு மிகப்பெரிய எதிரி. குறிப்பாக தலைக்கு குளித்துவிட்டு விரைவாக முடியை உலர்த்தவேண்டும் என ட்ரையரைப் பயன்படுத்துவார்கள். ஈரமுடி தளர்வாக இருக்கும்போது சூடான காற்றுப்பட்டால் முடி வெடித்துப்போவதுடன், அதிகமாக உதிர்ந்துவிடும்.
ரப்பர் பேண்டுகளைத் தவிர்க்கவும்
சிலர் முடியை எலாஸ்டிக் ரப்பர் பேண்டுகளால் இறுக்கி கட்டிக்கொள்வார்கள். இது முடியின் அடிப்பாகத்தை வெட்டிவிடும். எனவே முடிந்தவரை இறுக்கமான ரப்பர் பேண்டுகளை தவிர்க்கலாம்.
உடற்பயிற்சி
உடலை கட்டுக்குள் வைக்க உடற்பயிற்சி செய்வார்கள். அது என்ன முடிக்கு பயிற்சி என்று தோன்றுகிறதல்லவா? முடி வளர்ச்சிக்கு ரத்த ஓட்டம் மிகமிக அவசியம். 10 நிமிட ஓட்டம் அல்லது அரைமணிநேர நடைபயிற்சி உடலின் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி முடி வளர்ச்சியைத் தூண்டும்.