Mothers feeding pt desk
ஹெல்த்

ஆன்லைன் மூலம் தாய்ப்பால் விற்பனை... குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? மருத்துவர் விளக்கம்!

webteam

செய்தியாளர்: பிருந்தா

தாய்ப்பாலை பதப்படுத்தவோ விற்கவோ அங்கீகாரம் அளிக்கவில்லை:

தாய்ப்பாலை வணிக ரீதியாக பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் இல்லை என தெரிவித்துள்ள FSSAI, இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாய்ப்பாலை பதப்படுத்தவோ அல்லது விற்கவோ அங்கீகாரம் அளிக்கவில்லை. எனவே, அதற்கான உரிமங்களை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உத்தரவிட்டுள்ளது.

Mothers feeding

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுரையில், “உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், 2006 விதிகளின் கீழ் தாய்ப்பாலை, பதப்படுத்தவோ அல்லது விற்பனை செய்யவோ அனுமதியில்லை. எனவே, தாய்ப்பால் மற்றும் அதுதொடர்புடைய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். விதிகளை மீறி விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தாய்ப்பாலை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள உணவு வணிகங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிமம் வழங்கக் கூடாது. இதனை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வுலகை சுவாசிக்கத் தொடங்கும் குழந்தைக்கான இதயத்துடிப்பு தாய்ப்பால்:

பொதுச் சுகாதார பாலூட்டும் மையங்கள் (LMC) வழிகாட்டுதல்களின்படி, தாய்ப்பாலை எந்தவொரு வணிக நோக்கத்துக்கும் பயன்படுத்த முடியாது. சிசுக்களுக்கு மட்டுமே இது வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்ப்பால், இவ்வுலகை சுவாசிக்கத் தொடங்கும் குழந்தைக்கான இதயத்துடிப்பு. இவ்வுலகில் வாழப் போகும் குழந்தையின் ஒவ்வொரு நொடியும் ஆரோக்கியமானதாக அமைவதற்கு அடிப்படை ஆதாரம் தாய்ப்பால்தான். தாயிடமிருந்து குழந்தைக்கு கொடுக்கப்படும் தாய்ப்பால், அதன் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவக் கூடியவை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

mothers feeding

வணிக ரீதியான தாய்ப்பால் விற்பனைக்கு அனுமதி இல்லை:

அத்தகைய தாய்ப்பால் பல்வேறு சூழல்களில் ஆன்லைன் மூலம் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், வணிக ரீதியான தாய்ப்பால் விற்பனைக்கு அனுமதி இல்லை, அதற்கு உரிமம் வழங்கக் கூடாது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது FSSAU. தாய்ப்பாலை அவ்வளவு எளிதில் சேமித்து வைத்து குழந்தைகளுக்கு கொடுத்து விட முடியுமா என்றால் முடியாது.

ஒரு தாய் குழந்தை பெற்றெடுத்ததற்குப் பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது குழந்தைக்கு தாயால் தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழலிலோ வெளியில் இருந்து தாய்ப்பாலை பெற்று குழந்தைக்கு தர வேண்டிய நிலை உள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனையில் செயல்படும் விரிவான பாலூட்டுதல் மேலாண்மை மையம்:

மனிதநேய அடிப்படையில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலம் தாமாகவே முன்வந்து தானம் வழங்கும் தாய்மார்களிடம் இருந்து பெறப்படும் தாய்ப்பால் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுவது ஒருபுறம் என்றால், தாய்ப்பால் ஆன்லைன் மூலம் விற்பனை செய்வது என்பது குழந்தைகளின் ஆரோக்கியத்தின் மீதான கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனையில் விரிவான பாலூட்டுதல் மேலாண்மை மையம் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் செயல்படுகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு இதன் மூலம் தாய்ப்பால் வழங்கப்படுகிறது. மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட முடியாத நிலையில், இதன் மூலம் தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது.

Trichy GH

உரிய கவுன்சிலிங்கிற்குப் பிறகு தாய்மார்களிடமிருந்து பெறப்படும் தாய்ப்பாலின் மாதிரிகள் ஆய்வகங்கள் மூலம், குறிப்பாக தாய்ப்பாலில் JIV கிருமி தொற்று மற்றும் ஹெபடைடிஸ் பி எனப்படும் மஞ்சள் காமாலை உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, கிருமித் தொற்று இல்லை என உறுதிப்படுத்தி, உரிய குளிர் நிலையில் பதப்படுத்தி குழந்தைக்கு தேவைப்படும் போது அறை வெப்ப நிலைக்கு கொண்டுவரப்பட்டு குழந்தைக்கு கொடுக்கப்படுகிறது.

தாய்ப்பால் குறித்து குழந்தைகள் நல மருத்துவர் சொல்வதென்ன?

இது தொடர்பாக குழந்தைகள் நல மருத்துவர் பேராசிரியர், சுரேஷ் கூறுகையில்.... “திருச்சி அரசு மருத்துவமனையை பொறுத்த வரை தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்ஸிஜன் உதவியோடு இருக்கும் குழந்தைக்கு முழு கொள்ளளவு கொடுக்க முடியாத பட்சத்தில் சிறிதளவேணும் தாய்ப்பால் கொடுப்பதற்காகவும், குழந்தை பெற்றெடுத்த தாயால் குழந்தைக்கு பால் புகட்ட முடியாத நிலையில், அவர்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதை உறுதி செய்வதற்காகவும் தாய்ப்பால் வங்கிகள் மூலம் முறையான வகையில் தாய்ப்பால் சேமிக்கப்பட்டு உரிய பரிசோதனைக்கு பிறகு குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது.

mother child

இது ஒரு மிகப் பெரிய செயல்பாடு:

முதலில் தாய்ப்பால் கொடுக்க முன் வரும் தாய்மார்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு, அவர்களிடமிருந்து தாய்ப்பால் பெறப்பட்டு அதில், சிறிதளவு பரிசோதனைக்காக நுண்ணுயிரியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதில் கிருமித் தொற்று ஏதும் இல்லையென்று உறுதியான பிறகு, குளிர்ந்த நிலையில் பதப்படுத்தி, குழந்தைக்கு தேவையான போது அறை வெப்ப நிலைக்கு கொண்டு வந்து, அதனை குழந்தைக்கு கொடுப்பதாகவும், இது போன்ற முறையான ஸ்கிரீனிங் முறை இல்லாமல் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கப்படுவதை தவிர்க்கும் வகையிலேயே உணவு கட்டுப்பாட்டு தர நிர்ணயம் தாய்ப்பாலை வணிக ரீதியாக விற்பனை செய்ய அங்கீகாரம் மறுத்துள்ளது” என்று தெரிவித்தார்.

தாய்ப்பாலை சேமித்து பயன்படுத்தும் முறை:

தற்போதைய சூழலில் பணிக்குச் செல்லும் பெண்கள் தாய்ப்பாலை வீட்டில் உள்ள குளிர்பதன பெட்டியில் சேமித்து வைத்து கொடுக்கும் பட்சத்தில், அதனை ப்ரீசரில் வைத்து 18 மணி நேரத்தில் கொடுக்க வேண்டும். வெளியில் வைக்கும் போது நான்கு மணி நேரத்திற்குள்ளாக தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுத்து விட வேண்டும். தாய்ப்பாலை கொடுப்பதற்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் தூய்மையானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கும் மருத்துவர்கள், குழந்தைகளின் மீது அக்கறை கொண்டு பெற்றோர்கள் முறையாக சுத்திகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தாய்ப்பாலை மட்டுமே தர வேண்டும் என்றும், கிருமி தொற்றுள்ள தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்கும் பட்சத்தில் நோய்த்தொற்று ஏற்படுவதுடன், குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பாக அமையும் என்று எச்சரிக்கின்றனர்.

Mother feeding

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதா என்பதை பார்த்து பிறகே கொடுக்க வேண்டும்:

எனவே குழந்தையின் பெற்றோர்கள், குழந்தைக்கு தாய்ப்பாலை வெளியில் இருந்து வாங்கிக் கொடுக்கும் போது முன்னெச்சரிக்கையாக முறையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதா என்பதை பார்த்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

தாய்ப்பால் தட்டுப்பாடு ஏற்படும் தாய்மார்கள் தேவைப்பட்டால் அரசு மருத்துவமனையை அணுகலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக நாம் கொடுக்கும் தாய்ப்பால், அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக அமைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமை. எனவே முறையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தாய்ப்பாலை அரசு மருத்துவமனை அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து பெற்று குழந்தைகளுக்கு கொடுப்பதே பாதுகாப்பானது.