மூளையை உண்ணும் அமீபா முகநூல்
ஹெல்த்

மூளை உண்ணும் அமீபா என்றால் என்ன? உயிர்க்கொல்லியாக மாறுவது ஏன்? தப்பிப்பது எப்படி? முழு விவரம்!

மூளை திண்ணும் அமீபா என்றால் என்ன? எவ்வகையான பாதிப்பை இது ஏற்படுத்துகிறது? இதன் அறிகுறிகள் என்ன? தற்காத்து கொள்வது எப்படி? என்பதை மருத்துவர் சாந்தி தெரிவித்துள்ளார்... அது குறித்து காணலாம்.

ஜெனிட்டா ரோஸ்லின்

எழில் கொஞ்சும் இயற்கை வர்ணனைகளுக்கு பெயர் பெற்றது கேரளா... இங்கு சமீபகாலமாக பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல் பாதிப்பை தொடர்ந்து, புதிதாக இன்னொரு பாதிப்பும் வேகமாக பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

அதில் கடந்த ஓரிரு மாதங்களில் மட்டும் கோழிக்கோடை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர் மிருதுல், கண்ணூரைச் சேர்ந்த 13 வயது சிறுவன் தட்சிணா, மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஃபட்டுவா என மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள் மூவருக்கும் காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, இவர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதற்கு முன்பு, மூவரும் நீர்நிலைகளில் குளித்துள்ளனர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பிறகுதான் தெரிந்தது... மூளையை திண்ணும் அமீபாவால் இவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்று.

இந்த செய்தி தொகுப்பில், மூளையை திண்ணும் அமீபா என்றால் என்ன? எவ்வகையான பாதிப்பை அது ஏற்படுத்துகிறது? இதன் அறிகுறிகள் என்னென்ன? இதிலிருந்து நம்மை தற்காத்து கொள்வது எப்படி? இதற்கெல்லாம் பதிலளிக்கிறார் மருத்துவர் சாந்தி... அது குறித்து காணலாம்.

மூளை திண்ணும் அமீபா என்றால் என்ன?

Primary amebic meningoencephalitis எனப்படும் ஒரு தொற்று, மூளையை திண்ணும் அமீபா என்று கூறப்படும் Naegleria fowleri-ஆல் ஏற்படுகிறது. இந்த Naegleria fowleri அமீபாவானது சுத்தம் இல்லாத குளம் ஏரி, குளம், குட்டை போன்ற இடங்களில் வாழ்கிறது.

எப்படி பாதிப்பு ஏற்படுகிறது?

பராமரிப்பு இல்லாத, சுத்தம் இல்லாத ஏரி, குளம், குட்டை, தேங்கியுள்ள நீர்நிலைகள் போன்றவற்றில் இந்த வகை அமீபாக்கள் அதிகம் இருக்கும். நாம் அங்குசென்று குளிக்கும்போது, இவ்வகையான அமீபாக்கள் மூக்கின் வழியாக முளையை அடைந்து அங்குள்ள திசுக்களை முற்றிலுமாக அழித்து மூளையில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

மிகவும் அரிதாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டாலும், உடனடியாக மரணத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு ஆபத்தான ஒன்று.

பொதுவாக சுத்தம் இல்லாத ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளிலும், நீச்சல்குளம் போன்றவற்றிலும் போதுமான அளவு குளோரின் கலக்கப்படாததால் இந்த தொற்று பாதிப்பு ஏற்படுகிறது.

அறிகுறிகள்

இந்த அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 5 - 6 நாட்களில் ஆரம்ப அறிகுறியாக காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, மயக்கம் ஆகியவற்றை உணர்வார்கள். இருப்பினும் இந்த பாதிப்பை உறுதிசெய்ய அதிக நாட்கள் ஆகும்.

மேலும், உடலில் இந்த அமீபாவின் பாதிப்பு அதிகரிக்கும் போது கழுத்து இறுக்கமாக இருப்பது, விரைப்பு, மாயத்தோற்றம், வலிப்பு நோய் போன்றவை உண்டாகிறது. பாதிப்பு ஏற்பட்ட சில நாட்களிலேயே இந்த அமீபாவின் தாக்கம் அதிகரித்து, விரைவில் மரணத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

எப்படி தற்காத்து கொள்ளலாம்?

நீர்நிலைகளின் பாதுகாப்பு தன்மையை அந்ததந்த பகுதிகளில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

அமீபா தொற்றின் ஆரம்ப கால அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டு, ஐயம் உண்டானால், உடனடியாக மருத்துவமனையை அணுகி இது குறித்த சோதனை பரிசோதனையை மேற்கொண்டால், இப்பாதிப்பிலிருந்து மீள வாய்ப்புள்ளது.

நீச்சல் குளம் போன்றவற்றில் போதுமான அளவு குளோரினேஷன் செய்ய வேண்டும். குளோரினேஷன் அளவானது 2 PPM-க்கு மேல் இருக்க வேண்டும். அப்படி உள்ள இடங்களில் இவ்வகையான அமீபா உயிர்வாழ்வது இல்லை.

ஏரி, குளம், குட்டை தேங்கியுள்ள நீர், சுத்தம் இல்லாத பாதுகாப்பற்ற நீர்நிலை போன்றவற்றில் குளிப்பதை நாமும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அப்படியே குளித்தாலும், இந்த அமீபா மூக்கு மூலமே உடலுக்கு செல்கின்றது என்பதால் தலையை நீரில் மூழ்காமல், மேற்புறம் பார்த்தவாறு குளிக்க வேண்டும். நீச்சல் மேற்கொள்ளும் போது, மூக்கிற்கு கிளிப் போன்றவற்றை அணிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

இந்நிலையில் இதுகுறித்த பாதுகாப்பு நடவடிக்கையாக இதற்காக வழிகாட்டு நெறிமுறையையும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அரிதான தொற்றாக இருந்தாலும், விரைவில் மரணம் ஏற்படுத்த கூடிய பாதிப்பு இந்த ‘மூளை உண்ணும் அமீபா’ என்பதால் நோய் வந்த பிறகு மருந்து உட்கொள்வதை விட, வருமுன் காப்பதே சிறந்தது என்பதை நாமும் உணர்ந்து கொண்டால் நல்லது.