அசைவ உணவுகள் representational image | freepik
ஹெல்த்

FACTCHECK | எந்த விலங்கை சமைத்து சாப்பிடுகிறோமோ, அதன் குணத்தை பெற்றுவிடுவோமா?

“ஒருவர் அசைவம் சாப்பிடுவதால் அந்த மிருகத்தின் குணத்தை கொண்டிருப்பாரா என்றால் அப்படியெல்லாம் இல்லை என்பதே என் கருத்து” - ஊட்டச்சத்து நிபுணர் தாரணி கிருஷ்ணன்.

Jayashree A, ஜெ.நிவேதா

“அசைவம் சாப்பிட்டால் மனிதனின் குணம் மாறும்” என்று லொல்லு சபா புகழ் ஜீவா, ஜீ தமிழின் தமிழா தமிழா நிகழ்ச்சியில் சமீபத்தில் பேசி இருந்தார்.

அதில் அவர், “நான்வெஜ் எவ்வளவு தூரம் நாம் சாப்பிடுகிறோமோ, அதிலும் எந்த மிருகத்தை நாம் சாப்பிடுகிறோமோ, அந்த மிருகத்தின் குணத்தை அதன் தன்மையை நாம் கொண்டிருப்போம்” என்று கூறி இருந்தார். இது நெட்டிசன்களுக்கிடையே பேசுபொருளானது. பலரும் இவரை கடுமையாக சாடினர்.

நிகழ்ச்சியொன்றில் ஏதோ சொல்லிவிட்டார் என்பதை தாண்டி, அவர் அறிவியல்பூர்வமாக சொல்வதாக இதை பேசியிருந்தார். இதையடுத்து உண்மையிலேயே நான்வெஜ் சாப்பிட்டால் நமது குணங்களின் தன்மை மாறுமா? நாம் அந்த மிருகத்தின் குணத்தை பெறுவோமா என்பது குறித்து ஊட்டச்சத்து மற்றும் உணவியல் நிபுணர் தாரணி கிருஷ்ணன் அவர்களிடம் பேசினோம்.

“சைவ - அசைவ உதாரணத்தோடு இதை சொல்கிறேன். இறைச்சி, பருப்பு. இதில் ஒன்று அசைவம், மற்றொன்று சைவம். இதில் இரண்டிலும் புரதம் நிறைந்து இருக்கிறது. பருப்பை விட இறைச்சியில் இருக்கும் புரதம் பெரும்பாலும் நம் உடலுக்கு செல்கிறது.

அதேசமயம் பருப்பில் கார்போஹைட்ரேட் அதிக அளவு இருக்கிறது. அசைவத்தில் கொழுப்பு அதிக அளவு இருக்கிறது. இந்த கொழுப்பானது அதிகப்படியானால் உடலுக்கு தீங்கை விளைவிக்கும். உதாரணமாக இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றை உண்டுபண்ணும். ஆனால் அதிலும் விதிவிலக்குகள் உள்ளன.

தாரணி கிருஷ்ணன் உணவியல் நிபுணர்

உதாரணத்துக்கு மட்டன், ஃபீப் போன்றவற்றில் அதிக அளவு கொழுப்பு சத்து இருக்கிறது. உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் இதை உட்கொள்கையில் உடலில் சிக்கல் ஏற்படும். ஆனால் மீன், கோழியில் நல்ல கொழுப்பு இருப்பதால் அவற்றை உட்கொண்டால் உடலுக்கு தீங்கு ஏற்படாது. இதுதான் வித்தியாசம். இதை உணர்ந்து உணவுமுறையை அமைத்துக்கொள்வதே நலம்”

சைவம் சாப்பிட்டால் நோய்க்கான வாய்ப்பு குறைவதாக அதிகம் சொல்லப்படுகிறதே... இது ஏன்? இது உண்மையான கருத்தா?

“நாம் சைவம் சமைக்கும்போது அதில் பயன்படுத்தும் எண்ணெயின் அளவு குறைவு (அசைவத்தோடு ஒப்பிடுகையில்). அதனால் அதில் கெட்ட கொழுப்புக்கு அதிகம் வேலை வருவதில்லை. அசைவத்தில் ஏற்கெனவே கொழுப்புச்சத்து அதிகம் இருப்பதாலும் அதை வறுத்து மசாலா போட்டு சாப்பிடுவதாலும் இன்னும் அதிகளவு கொழுப்பானது அதிகரிக்கிறது. இதனால் நோய்களின் தாக்கமும் அதிகரித்துவிடுகிறது. இதைவைத்துதான் மேற்குறிப்பிட்டவர்களும் பேசியிருக்கக்கூடும்.

எந்த உணவென்றாலும் அதை நாம் சமைக்கும் முறை (எண்ணெய்யை முடிந்தவரை குறைப்பது, உப்பு - சர்க்கரையெல்லாம் அதிகளவு சேர்க்காமல் இருப்பதுபோல), உடல் உழைப்பு, அன்றாடம் உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் நம்மால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்

மேலும் ஒருவர் அசைவம் சாப்பிடுவதால் அந்த மிருகத்தின் குணத்தை கொண்டிருப்பாரா என்றால் அப்படியெல்லாம் இல்லை என்பதே என் கருத்து. இதை அவர்கள் சொல்வதற்கு சரியான காரணமே இல்லை. ஒருவிஷயம், கெட்டகொழுப்பு உடலில் சேர்ந்தால் (அசைவமோ சைவமோ) கோபம் வரும் தன்மை அதிகரிக்கும். ரத்தக்கொதிப்பு போன்றவையெல்லாம் இதன் நீட்சியாக இருக்கும். அதிலும் அதிகளவு கொழுப்பு நிறைந்த அசைவம் அதிகம் எடுத்துக்கொண்டால் உடல் பருமன், மனநிலை மாற்றம் மற்றும் நோய்களின் தாக்கம் அதிகரிக்கும்.

இந்த இடத்தில் மீன், முட்டை, கோழி, போன்றவற்றை சரியான முறையில் சரியான நேரத்தில் சாப்பிடும்போது குணங்களில் எவ்வித மாற்றமும் வராது என்பதையும் குறிப்பிடுகிறேன்” என்றார்.