ஹெல்த்

குரங்கம்மை அறிகுறி தெரிந்தால் பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் - மத்திய அரசு

குரங்கம்மை அறிகுறி தெரிந்தால் பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் - மத்திய அரசு

webteam

இந்தியாவில் குரங்கம்மை நோய் தொற்று முதன்முதலில் கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையிலும் மற்றொரு நபர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து நோய்த்தொற்று உடைய நபர்கள் டெல்லி, உத்திர பிரதேசம் என பிற மாநிலங்களிலும் இருப்பது அடுத்தடுத்து தெரியவந்தது.

இந்நிலையில் நோய் பரவலை தடுப்பதற்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கோள்ளவும் மத்திய அரசால் ஒரு குழு நியமிக்கப்பட்டு நோய் பரவுவதற்கான காரணங்கள் அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

தற்போது இந்தியாவில் குரங்கம்மை நோய் தொற்றால் இதுவரை ஒட்டுமொத்தமாக 8 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் மேலும் சில முக்கிய வழிகாட்டுதல்கள் குரங்கம்மை நோயை தடுக்க செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்,

  • குரங்கம்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரை முதலில் தனிமைப்படுத்த வேண்டும்.
  • கைகளை சோப்பு தண்ணீர் அல்லது சானிடைசர் வைத்து சுத்தப்படுத்த வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட நபர் அருகில் இருந்தால் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும்.
  • குரங்கம்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் துண்டு, பெட்ஷீட் போன்றவற்றை பகிரக்கூடாது.
  • பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய உடைகளை குரங்கம்மை நோய் தொற்றால் பாதிக்கப்படாதவர்களின் துணிகளுடன் சேர்த்து சலவை செய்யக்கூடாது.
  • குரங்கம்மை அறிகுறி தெரிந்தால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது.

முதலிய முக்கிய அறிவுறுத்தல்களை மத்திய அரசு  தெரிவித்துள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரையில் டெல்லி, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் தான் குரங்கம்மை நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. கேரளாவில் ஒருவர் இதுவரை குரங்கமை நோய் தொற்றுக்கு உயிர் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.