பஞ்சுமிட்டாய் முகநூல்
ஹெல்த்

மெரினாவில் பஞ்சுமிட்டாய் பறிமுதல்... புற்றுநோய் உண்டாக்கும் நச்சு? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

சென்னையில் மெரினா கடற்கரையில் விற்கப்பட்ட பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு ரசாயனம் இருப்பது உணவு பாதுகாப்புத் துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

PT WEB

குழந்தைகள் விரும்பி உண்ணும் பஞ்சுமிட்டாய் அவர்களின் உயிருக்கே ஆபத்தான நஞ்சுமிட்டாயாக மாறியிருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது. புதுச்சேரியில் விற்கப்பட்ட பஞ்சுமிட்டாயில் ஆபத்தை விளைவிக்கும் Rhodomine B எனும் ரசாயனம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னையிலும் பொது இடங்களில் விற்கப்படும் பஞ்சுமிட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த 8 ஆம் தேதி மெரினா கடற்கரையில் வடமாநில இளைஞர்களிடம் இருந்த பஞ்சு மிட்டாய்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பஞ்சுமிட்டாய் விற்பனையில் ஈடுபட்ட நபர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை காவல்துறையினர் சேகரித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சுமிட்டாய்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பினர். இந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

அதில், "தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் Rhodomine B என்ற ரசாயனம் இருப்பது உறுதியாகி இருக்கிறது. பஞ்சு மிட்டாயில் நிறத்திற்காக தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ரோடமென் பி என்பது தோல் மற்றும் ஜவுளித்தொழிலில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள்.

தொடர்ந்து இந்த ரசாயனத்தை பயன்படுத்தினால் சிறுநீரகம் அல்லது கல்லீரல் பாதிப்பும் ஏற்படும். அதிக அளவில் எடுத்துக்கொள்வது புற்றுநோய்க்கு வழி வகுக்கும்"என்று உணவுப்பாதுகாப்புத்துறையின் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.