கோடைகாலம் என்பதால் நம்மில் பலரும் தேடி ஓடுவது பழச்சாறு கடைகளைத்தான். அதேநேரம் என்னதான் வெயில் வெளுத்து வாங்குகிறது என்றாலும் டீ , காஃபி பிரியர்களுக்கு அதெல்லாம் கணக்கில் இல்லை. அவர்களும் கடைகளுக்கு படையெடுக்கிறார்கள். ஆனால் இது எதுவுமே குடிக்கக் கூடாது என்கிறது ஐ.சி.எம்.ஆர். அது ஏன்? பார்க்கலாம்...
மக்கள் அதிகம் விரும்பி பருகும் பானங்களான செயற்கை குளிர்பானங்கள், பழச்சாறுகள், டீ, காஃபி போன்றவற்றை அருந்துவதை தவிர்க்கவேண்டும் என்று புதிய உணவு வழிகாட்டு நெறிமுறைகளை ஐசிஎம்ஆர் தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் அவற்றுக்கு மாற்றாக நீர் ஆகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டீ, காஃபி ஆகியவை உணவு உண்டதன் பிறகு எடுத்து கொள்வது, செரிமானத்திற்கு உதவுகிறது என்று பெரும்பாலானோர் நம்புகிறார்கள். ஆனால், அது உண்மையல்ல. தேநீர் மற்றும் காஃபி ஆகிய இரண்டிலும், கஃபின் அதிக அளவு உள்ளது. இவை மத்திய நரம்பு மண்டலத்தை பாதித்து மீண்டும் மீண்டும் அருந்தவேண்டும் என்ற உணர்வுவை உண்டாக்குகிறது.
ஒரு அறிக்கையின்படி, ஒரு கப் (150 மிலி) காய்ச்சப்பட்ட காஃபியில், 80- 120 மிகி கஃபினும், இன்ஸ்ட்டெண்ட் காஃபியில் 50-65 மிகி, தேநீரிலில் 30-65 கஃபினும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உடலுக்கு நல்லதல்ல. இருப்பினும் டீ, காஃபி அருந்துவதை முற்றிலும் கைவிட வேண்டும் என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக, ‘அவற்றை குடிப்பதை தவிர்ப்பது நமது உடலுக்கு நன்மை பயக்கும்’ என்று ஐசிஎம்ஆர் தெரிவிக்கிறது.
டீ காஃபிக்கு அடுத்தபடியாக, தற்போது பலரும் விரும்பி எடுக்கும் பானமாக உள்ளன குளிர்பானங்கள். செயற்கை குளிர்பானங்களால் பல்வேறு உடல் கோளாறுகள் உருவாகும் என்று மருத்துவர்கள் பலரும் எச்சரித்தாலும் கூட, மக்கள் பலரும் அதற்கு செவிசாய்ப்பதில்லை.
குளிர்பானங்களை பொறுத்தவரை அவை அதிக சர்க்கரையை கொண்டவையாகவும், ஊட்டச்சத்து இல்லாத ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. அவற்றை தொடர்ந்து குடிப்பதால் உடல் பருமன், டைப் 2 நீரிழிவு நோய், பல் பிரச்னை, இதய நோய்கள் என பல பிரச்னைகள் ஏற்படலாம்.
இதை குறிப்பிட்டே, “குளிர்பானங்கள் என்பது தண்ணீர் அல்லது பழச்சாறுகளுக்கு மாற்றாக பருகக் கூடியவை இல்லை. ஆகவே, அவற்றை பருகுவதை தவிர்க்கவேண்டும்” என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இவற்றுக்கு பதிலாக மோர், எலுமிச்சை சாறு, சர்க்கரை சேர்க்காமல் பழச்சாறு, தேங்காய் தண்ணீர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
கரும்புச்சாற்றை பொறுத்தவரை, அவை அதிக சர்க்கரையை உள்ளடக்கியவை. 100 மில்லிட்டர் கரும்புச்சாறில் 13 - 15 கிராம் சர்க்கரை உள்ளது. பெரியவர்களுக்கு ஒரு நாளுக்குரிய சர்க்கரையின் அளவு 30 கிராமுக்கு மேல் தாண்டக்கூடாது.
7-10 வயதிலான குழந்தைகள், நாளைக்கு 24 கிராமுக்கும் குறைவாகத்தான் சர்க்கரை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆகவே, சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறுகளுக்கு பதிலாக முழு பழங்களை மக்கள் சாப்பிட்டு வரவும். அதுவே சிறப்பு. பழச்சாறுகளை காட்டிலும், முழு பழங்களை உட்கொள்ளும் போது அவற்றில் உள்ள நார்ச்சத்து, ஊட்டச்சத்து ஆகியவை முழுவதுமாக உடலை சென்று சேர்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.