நம் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் அவசியம். ஊட்டச்சத்துக்களை மைக்ரோ மற்றும் மேக்ரோ என இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒரு வைட்டமினின் பயனை மற்றொரு வைட்டமின் கொடுக்கமுடியாது. மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, புரதம் போன்றவை மேக்ரோ ஊட்டச்சத்துக்களுக்குக் கீழ் அடங்கும். இவை நாம் தினம் உண்ணும் உணவில் அதிகளவில் இருப்பதால் முடிந்தவரை உடலுக்குப் போதுமான அளவு கிடைக்கிறது. ஆனால், மைக்ரோ ஊட்டச்சத்துக்கள் அப்படிக் கிடைப்பதில்லை. இதனால்தான் நாட்டில் பெரும்பாலானோருக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதனால் அனீமியா, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. நமது நாட்டில் பொதுவாக 4 வகையான ஊட்டச்சத்து குறைபாடுகள் காணப்படுகின்றன.
வைட்டமின் டி
நமது நாட்டில் சூரிய ஒளிக்கு பஞ்சமில்லை என்றாலும் பெரும்பாலானவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கிறது. நாம் சூரிய ஒளியில் நிற்கும்போது உடலிலிருக்கும் கொழுப்பிலிருந்து வைட்டமின் டி உடலில் சேர்கிறது. வைட்டமின் டி தான் கால்சியம் சத்தை உடல் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதனால் எலும்பு மற்றும் பற்கள் வலுவடைகிறது. வெண்டைக்காய், பால் பொருட்கள் மற்றும் காளான் போன்ற ஒருசில இயற்கைப் பொருட்களில் மட்டுமே வைட்டமின் டி செறிந்துள்ளது. 70 வயதுக்கு கீழ் இருப்பவர்களுக்கு ஒரு நாளுக்கு 600 ஐயு வைட்டமின் டியும், அதற்குமேல் 800ஐயும் தேவைப்படுகிறது.
வைட்டமின் பி12
இந்தியாவில் சிலர் அசைவம் எடுத்துக்கொள்வதில்லை. எனவே வைட்டமின் பி12 அவர்களுக்கு அதிகம் கிடைப்பதில்லை. நரம்பு, திசுக்கள், மூளை செயல்பாடு மற்றும் ரத்த சிவப்பணு உற்பத்திக்கு வைட்டமின் பி12 கண்டிப்பாக தேவை. இறைச்சி வகைகள், முட்டை, மீன் மற்றும் கடல் உணவுகளில்தான் வைட்டமின் பி12 அதிகம் இருக்கிறது. இதுதவிர, சில பால் பொருட்களில் இருக்கிறது. ஆனால் சராசரியாக ஒருநாளுக்கு 2.4 மைக்ரோகிராம் உடலுக்குத் தேவைப்படுகிறது.
ஃபோலேட்
வைட்டமின் பி9லிருந்து ஃபோலேட் உடலுக்குக் கிடைக்கிறது. இவை பச்சைக் கீரைகள், காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள், பீன்ஸ், முட்டை மற்றும் பருப்பு வகைகளில் அதிகம் இருக்கிறது. உடலில் டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ உருவாக்கத்திற்கு ஃபோலேட் பெரிதும் தேவைப்படுகிறது. உடைந்த செல்களையும் சரிசெய்கிறது. இது கர்ப்பிணிகளுக்கு கட்டாயம் தேவைப்படும் சத்துக்களில் ஒன்று. குழந்தைகளுக்கு ஒருவித மூச்சுத்திணறல் வராமல் தடுக்கக்கூடியது. ஒருநாளில் சராசரியாக 400 மைக்ரோகிராம்களும், கர்ப்பிணிகளுக்கு 600 மைக்ரோகிராம்களும் தேவைப்படுகிறது.
இரும்புச்சத்து
இரும்புச்சத்து குறைபாடு என்று சொல்லக்கூடிய அனீமியா பொதுவாக உடலகளவில் காணப்படக்கூடிய பிரச்னைகளில் ஒன்று. குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கும், உடலில் ரத்தம் குறைவாக உள்ள பெண்களுக்கும் மாதவிடாய் ஏற்படும்போதும் இந்த குறைப்பாட்டின் தாக்கம் அதிகமாக இருக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவு சரியாக இருக்க இரும்புச்சத்து மிகமிக அவசியம். இதனால் சருமம் வெளிரி, உடல் சோர்வடையும். ஒரு ஆண் மற்றும் 50 வயதுக்கு மேற்ப்பட்ட பெண்களுக்கு ஒருநாளில் சராசரியாக 8.7 மைக்ரோகிராமும், 19-50 வயது பெண்களுக்கு 14.8 மைக்ரோகிராமும் தேவைபடுகிறது. கீரைகள், டார்க் சாக்லெட், மாதுளை, மீன் மற்றும் இறைச்சிகளில் இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது.