ஹெல்த்

பெற்றால்தான் பிள்ளையா? 1,400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் தாகம் தீர்த்து உயர்ந்த தாய்!

பெற்றால்தான் பிள்ளையா? 1,400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் தாகம் தீர்த்து உயர்ந்த தாய்!

நிவேதா ஜெகராஜா

கோவையை சேர்ந்த 29 வயது பெண்ணொருவர் கடந்த 7 மாதங்களில் சுமார் 1,400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் செய்திருக்கிறார். இதற்காக அவர் `இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’-ல் இடம்பெற்றிருக்கிறார்.

கோவையை சேர்ந்த சிந்து மோனிகா என்ற 29 வயதான பொறியியல் பட்டதாரியொருவர், கடந்த ஜூலை 2021 முதல் ஏப்ரல் 2022 வரையிலான காலகட்டத்தில் தாய்ப்பால் தானம் செய்திருக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில், தமிழ்நாடு அரசின் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த குழந்தைகளுக்கு, சிந்து அளித்த தாய்ப்பால் அளவு, சுமார் 42,000 மிலி-லாம். இதன் காரணமாக, ஆசிய மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் சிந்து இடம்பெற்றிருக்கிறார்.

இதுதொடர்பாக சிந்து சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியொன்றில், “இந்த விஷயத்தில் எனக்கு பக்கபலமாக இருந்து உதவிய என் கணவருக்கு தான் நான் நன்றி சொல்வேன்” என்றுள்ளார். மோனிகா மற்றும் அவரது கணவர் உதவி பேராசிரியர் மகேஷ்வரனுக்கு 18 மாதங்களேயான வெண்பா என்ற பெண்குழந்தையொன்று இருக்கின்றார். அமிர்தம் என்ற தன்னார்வ அமைப்புடன் கைகோர்த்துதான், சிந்து இந்த சாதனையை செய்துள்ளார். அந்த தன்னார்வ அமைப்பினர் அளித்திருக்கும் தகவலின்படி, சிந்து 50 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்திருக்கிறார்.

தனது இந்த சாதனை மோனிகா கூறுகையில், “என் குழந்தைக்கு தாய்ப்பால் அளிப்பது மட்டுமன்றி, தாய்ப்பால் சேகரிக்கும் பணியிலும் நான் ஈடுபட்டேன். தன்னார்வு அமைப்பை சேர்ந்த ரூபா செல்வநாயகி என்பவருடன் கைகோர்த்து, இந்தப் பணியை மேற்கொண்டேன். அந்த தன்னார்வு அமைப்பினர், ஒவ்வொரு வாரமும் நாங்கள் சேமித்துக் கொடுக்கும் தாய்ப்பாலை, கோவை தாய்ப்பால் வங்கியினரிடம் ஒப்படைப்பர்” என்றனர்.

தன்னார்வலர் ரூபா செல்வநாயகி தனது சேவை குறித்து கூறுகையில், “2 வருடங்களுக்கு முன்னர் இந்த சேவையை நான் தொடங்கினேன். அரசு மருத்துவமனைகளில் நோய்வாய்பட்டிருக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தற்போது எங்கள் அமைப்பில் சுமார் 50 பெண்கள் தன்னார்வலர்களாக உள்ளனர். அவர்களில் 30 பேர், தற்போது தாய்ப்பால் தானம் கொடுத்து வருகின்றனர்” என்றார்.

தமிழகத்தை பொறுத்தவரை, சுமார் 45 தாய்ப்பால் வங்கிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் 35, தமிழ்நாடு அரசின் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள தாய்ப்பால் வங்கிகள்தாம். இந்திய அளவிலேயே மொத்தம் 70 தாய்ப்பால் வங்கிகள் மட்டுமே இருக்கும் நிலையில், அவற்றில் சரிபாதிக்கும் மேல் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. இப்படி கிடைக்கப்பெறும் தாய்ப்பால், தாயற்ற பச்சிளம் குழந்தைகளுக்கும் – தாய்ப்பால் கொடுக்க முடியாமல் அவதியுறும் அம்மாக்களின் குழந்தைகளுக்கும் வழங்கப்படுவது வழக்கம்.