ஹெல்த்

ஊழியரின் 2 வயது குழந்தைக்கு தேவைப்பட்ட ரூ. 16 கோடி மருந்துச் செலவை ஏற்ற நிலக்கரி நிறுவனம்

ஊழியரின் 2 வயது குழந்தைக்கு தேவைப்பட்ட ரூ. 16 கோடி மருந்துச் செலவை ஏற்ற நிலக்கரி நிறுவனம்

நிவேதா ஜெகராஜா

சத்தீஸ்கர் மாநிலத்தின் தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் (எஸ்.இ.சி.எல்.) பணிபுரியும் சதீஷ் குமார் ரவி என்பவரின் 2 வயது குழந்தையான ஷ்ருஷ்டி ராணிக்கு தசைநார் சிதைவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அக்குழந்தையின் மருத்துவ செலவான ரூ.16 கோடியை, அவர் பணிபுரியும் நிறுவனமே ஏற்றிருக்கிறது.

ஷ்ருஷ்டி ராணிக்கு கடந்த வருடத்தில் தசைநார் சிதைவு நோய் உறுதியான நிலையில், அவர் அப்போதிலிருந்து சிகிச்சையிலிருந்து வந்திருக்கிறார். தற்சமயம் குழந்தை ஷ்ருஷ்டி, வீட்டிலேயே வெண்டிலேட்டர் உதவியுடன் இருக்கிறார். இவரை குணப்படுத்துவதற்கு ‘Zolgensma’ என்ற 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து தேவைப்பட்டிருந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து அவர் பணிபுரிந்த எஸ்.இ.சி.எல். நிறுவனம் அவருக்கு தாமாக முன்வந்து இந்த உதவியை செய்துள்ளது.

உதவி குறித்து அந்நிறுவனம் தெரிவிக்கையில், “சதீஷ் போன்ற சாதாரண நிலையிலுள்ள ஒருவரால், இவ்வளவு பெரிய தொகையுள்ள மருந்தை இறக்குமதி செய்ய முடியாது. அதனால்தான் நிறுவனம் சார்பில் அதை செய்ய திட்டமிட்டுள்ளோம். எங்கள் நிறுவனத்தில் பணிபுரிவோரும், அவர்களின் குடும்பத்தினரும்தான் எங்களுடைய செல்வம்” என்று கூறியுள்ளார்.

ஊழியருக்கு நிறுவனம் செய்த இந்த உதவி பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.