மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்து திட்டம் வகுக்கவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
மாநில மனநல கொள்கையை அமல்படுத்தக் கோரியும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் அமைக்கக் கோரியும் ‘சீர்’ என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, 460 மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், 'கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம் மூலம், 45 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அங்கு கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய நீதிபதிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்து திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.