கல்லீரலில் வீக்கம் முகநூல்
ஹெல்த்

மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரல் வீக்கம் - மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சிகர புள்ளிவிவரம்

PT WEB

செய்தியாளர்: ஐஸ்வர்யா

மனித உடலின் உள்ளே இருக்கும் இதயம், கணையம், சிறுநீரகம் போன்ற திட உறுப்புகளிலேயே, மிகப்பெரிய உறுப்பு கல்லீரல்தான். இவற்றில் மிக அதிகமான வேலைகளைச் செய்வதும் கல்லீரல்தான். ரத்தத்தை சுத்திகரிப்பது, முக்கிய புரதங்கள் மற்றும் செரிமான சக்திக்கான பித்தநீரை உற்பத்தி செய்வது உள்ளிட்ட 500க்கும் அதிகமான வேலைகளை கல்லீரல்தான் செய்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் இம்யூனோகுளோஃபுலின் போன்ற புரத உற்பத்தியும் கல்லீரலில்தான் நடக்கிறது. சர்க்கரை அளவைப் பராமரிப்பது போன்ற சிறு உதவிகளையும் கல்லீரல் செய்கிறது. இப்படியான கல்லீரலின் ஆரோக்கியமானது, இந்தியர்களுக்கு மிகுந்த ஆபத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவில், பத்தில் 3 பேருக்கு கல்லீரல் பாதிப்பு இருப்பதாகவும், மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் இந்த பாதிப்பு இருப்பதாகவும் கூறுகிறது அந்த அறிக்கை.

இதற்கான காரணங்களை மருத்துவ நிபுணர் ஆதித்யன் குகனிடம் கேட்டோம். அவர் தெரிவிக்கையில், “உடல் பருமன் உள்ளவர்கள் மட்டுமின்றி, சாதாரண உடல் எடையுடன் இருப்பவர்களுக்கும் கல்லீரல் பாதிப்பு ஏற்படும். துரித உணவு, மன அழுத்தம், தூக்கமின்மை உள்ளிட்டவையே இதன் முக்கிய காரணிகள் என்றாலும், உடற்பயிற்சி, பாரம்பரிய உணவுப் பழக்கம் போன்றவற்றால், கல்லீரல் பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள முடியும்.

கல்லீரல் பாதிப்புகள் குறித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கையை, எச்சரிக்கை மணியாக பொதுமக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

கல்லீரலை பாதுகாத்து உயிரைக் காப்பது குறித்து, அரசாங்கமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற வலியுறுத்தலையும் மருத்துவர்கள் முன்வைக்கிறார்கள்.