மாராடைப்பு ஏற்படும் வயது மற்றும் விகிதம் என்பது காலம் மாற மாற அதிகரித்த வண்ணம்தான் உள்ளது. இதன் உதாரணமாக மாரடைப்பினால் இளம் வயதினரும் தற்சமயங்களில் பாதிப்படைகிறார்கள். மேலும், 16 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட இளம் வயதினர்கள் இதனால் பாதிக்கப்பட்டு மரணம் அடைகின்றனர் என்பது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு நிதர்சனமான உண்மை.
இந்நிலையில், மாராடைப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களின் சந்திப்பில் குறிப்பிடுகையில், “தீவிர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்க அதீத உழைப்பு, அதீத ஓட்டம், அதீத உடற்பயிற்சி, அதீத ஜிம் பயிற்சி போன்றவற்றை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு தவிர்க்க வேண்டும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
எனவே இதனை அடிப்படையாக வைத்து பொதுநல மருத்துவர் அருணாசலம் மற்றும் இதயநல மருத்துவர் பாரதி செல்வன் ஆகியோரிடம் பேசினோம்.
இது குறித்து பொதுநல மருத்துவர், அருணாச்சலம் தெரிவிக்கையில், “ICMR ஆய்வு அறிக்கை ஒன்றில் கொரோனாவிற்கு செலுத்தப்படும் தடுப்பூசிகளுக்கும் இந்த திடீர் மரணங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றுதான் தெரிவிக்கின்றனர். இதை பல ஆய்வு நிறுவனங்களும்கூட தங்களின் ஆய்வுக் கட்டுரைகளின் மூலம் தெரிவிக்கின்றனர்.
தற்போது ICMR வெளியிட்ட அறிக்கையில் கொரோனாவினால் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்சமயங்களில் மாரடைப்பு என்பது அதிகரித்து காணப்படுகிறது என்று தெரிகிறது.
யாரெல்லாம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஆக்சிஜன் சிலிண்டரின் உதவியோடு மருத்துவமனையிலும் வீடுகளிலும் சிகிச்சை பெற்றார்களோ, இப்படி யாருக்கெல்லாம் ஆக்சிஜன் தேவை அதிகரித்து காணப்பட்டதோ அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பது என் கருத்து.
எப்படி இதை தெரிந்து கொள்ளலாம் என்றால், யாருக்கெல்லாம் வழக்கத்துக்கு அதிகமாக மூச்சிரைச்சல் என்பது இருக்கிறதோ அவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது என்பது நல்லது.
தூக்கம் இல்லாமல் போவது, நடைப்பயிற்சி இல்லாமல் இருப்பது, நேரம் தவறி உறங்க செல்வது போன்றவை தூக்கத்தையும் வாழ்க்கையின் தரத்தையும் பாதிக்கிறது என்பதுதான் உண்மை.
எந்த நடைப்பயிற்சியும் இல்லாமல் 18 மணி நேரம் உழைப்பது என்பது மிகவும் தவறான ஒரு விஷயம். இப்படி இருப்பவர்களுக்கு தான் மரணங்கள் சம்பவிக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இப்படி தூக்கம், உடற்பயிற்சி, சமச்சீரான உணவு அதாவது காய்கறிகள், பழங்கள், இறைச்சிகளை அதிகம் எடுத்து கொள்ளாமல் இருப்பது போன்றவை திடீர் மரணங்களுக்கு காரணமாக அமைகின்றன.
எனவே கொரோனாவில் தீவிரமாக பாதிக்கப்பட்டு அதன் விளைவாக 6 மாதமோ அதற்கு மேலுமோ தீவிர மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட பிறகுதான் உடல்நலம் சரியானது என்றால், இப்படி அதிதீவிர பாதிப்பு அடைந்தவர்கள் நிச்சயம் இந்த மாரடைப்பு போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும். அதேசமயம் இது போன்று ஏற்படும் காரணங்களையும் உதாசினப்படுத்தாமல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது என்பது சிறந்தது.
“மாரடைப்பு ஏற்படுவதற்கு என்று பல்வேறு காரணிகள் இருக்கிறது என்று மருத்துவ உலகம் சொல்கிறது. குறிப்பாக புகைப்பிடித்தல், இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது, இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய்,உடற்பயிற்சி இன்மை , அதிக உடல் பருமன் என்று மாரடைப்பை ஏற்படுத்தும் காரணிகள் பல இருக்கின்றன. ஆனால் இக்காரணிகள் இருந்தாலே கட்டாயம் மாரடைப்பு வரும் என்று அர்த்தம் இல்லை. இதுபோன்ற காரணிகள் இல்லாதவர்களை விட இருப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
அதேபோலதான் கொரோனா பாதிப்படையாதவர்களை காட்டிலும் பாதிப்படைந்தவர்கள் மாரடைப்பினால் பாதிப்படைவது என்பது அதிகம். அதேசமயம் இதற்காக கொரோனா பாதித்த நோயாளிகள் பயப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மேலும் சிறிது நேரம் நடந்து சென்றால் நெஞ்சு வலி ஏற்படுவது போன்ற உணர்வு, மார்பின் இடது அல்லது வலது பகுதிகளில் வலி ஏற்பட்டு அப்படியே கீழ்த்தாடைகளுக்கு வலி பரவது என்று இது போன்ற பிரச்னைகளை கொரோனா பாதிப்படையாத நோயாளி ஒருவர் கூறினால் எப்படி அவர்கள் இதய மருத்துவரை நோக்கி பரிசோதனை மேற்கொள்வார்களோ! அதேபோலதான் கொரோனா பாதிப்படைந்தவர்களும் பரிசோதனை மேற்கொள்வது என்பதும்m அவசியம் ஆகிறது.
சிலருக்கு மாரடைப்பு இல்லாமல் இதய தசை செயலிழப்பின் காரணமாகவும் இதயபாதிப்பு ஏற்படுகின்றது.
இதன் அறிகுறியாக, சாதாரணமாக நடந்தால் மூச்சு வாங்குவது போன்ற உணர்வு, கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு இல்லாமல் பாதிப்படைந்ததற்கு பிறகு ஏற்பட்டால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும்.
உடனடியாக எக்கோ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலம் pumping ejection fraction எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளலாம். சாதாரணமாக 55 சதவீதம் மேல் இதன் அளவு இருக்க வேண்டும். இந்த அளவு குறைந்தால் உடற்பயிற்சி, எடை தூக்குதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்பது இதன் மூலம் கூறப்படும் மருத்துவ அறிவுரை.
அதேசமயம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் மூச்சிரைச்சல் போன்ற காரணங்கள் நுரையீரல் பாதிப்பால் ஏற்பட கூடியது.
அதே சமயம் கோவிட் பாதிப்பு சரியான பிறகு இதய பாதிப்பு ஏற்பட்டால் அப்பாதிப்பு என்பது நுரையினால் ஏற்பட்ட பாதிப்பா? இதய தசையினால் ஏற்பட்ட பாதிப்பா? என்பதை கண்டறிய வேண்டும். இதனை அறிந்து கொள்வதற்குதான் pumping ejection fraction பரிசோதனையானது மேற்கொள்ளப்படுகிறது
இந்த எக்கோ பரிசோதனையில் ejection fraction ன் அளவு குறைந்திருந்தால் ஏற்பட்ட பாதிப்பு இதயத்தின் காரணமாக ஏற்பட்டதாகவும், அதேசமயம் அதன் அளவு சாதரணமாக இருந்தால் நுரையீரல் பாதிப்படைந்ததற்கான ஒரு அடையாளம்தான் என்பதை அறிந்து கொள்ளலாம். எனவே இத்தகைய பாதிப்பை சரிசெய்ய வேண்டும் என்றால் அதற்கு மூச்சி பயிற்சி, மருத்துவர் கூறும் அறிவுரைகளை கொண்டுதான் சரி செய்ய இயலும்.”
கொரோனா காலகட்டத்தில் அப்பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்ள கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது. சமீப காலமாக அதிகரித்து வரும் மாரடைப்புக்கு காரணம் கொரோனா காலக்கட்டத்தில் அதிலிருந்து தற்காத்து கொள்ள வழங்கப்பட்ட தடுப்பூசிகள்தான் என்ற வதந்தியும் அச்சமும் மக்கள் மத்தியில் பெரும்பாலும் உலாவி வருகிறது.
ஆனால் இது குறித்து மருத்துவர் தெரிவிக்கையில், ”தடுப்பூசியின் மூலம் மாரடைப்பு வருகிறது என்பது முற்றிலும் தவறான விஷயம். இதன் காரணமாக இதய நோய்கள் வருகிறது என்பதும் தவறான தகவல். கொரோனாவிற்கு அளிக்கப்படும் தடுப்பூசியின் காரணமாக இத்தகைய பாதிப்பு ஏற்படுவதில்லை“ என்று விளக்கமளித்தார்.