கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் பலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக வெளியான ஆய்வறிக்கையை ஏற்கமுடியாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கான கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் 30% பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே, கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் ஒரு சிலருக்கு அரிதாக பக்க விளைவுகள் ஏற்பட்டதாக அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பனாரஸ் பல்கலைக்கழக ஆய்வை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடுமையாக சாடியுள்ளது. முறையான ஆய்வு நடைமுறைகளை சரியாக கடைபிடிக்காமலும் தவறான தகவல்களுடனும் அந்த ஆய்வு முடிவுகள் உள்ளதாக ஐசிஎம்ஆர் இயக்குநர் ராஜிவ் பால் (RAJIV BAHL) தெரிவித்தார்.
மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில், “தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், செலுத்திக் கொள்ளாதவர்களை ஒப்பிட்டு இது போன்ற ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். ஆனால் இந்த ஆய்வு அப்படி செய்யப்படவில்லை.மேலும், ஆய்வுக்கட்டுரையில் எங்கள் அமைப்பின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது அதை உடனடியாக நீக்குமாறு சம்மந்தப்பட்டவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.” என்று ஐசிஎம்ஆர் இயக்குநர் தெரிவித்தார்.