செல்போன் உபயோகிப்பதால் மூளை புற்றுநோய் ஏற்படுமா புதிய தலைமுறை
ஹெல்த்

செல்போன் உபயோகிப்பதால் மூளை புற்றுநோய் ஏற்படுமா? -WHO சொல்வதென்ன?

செல்போன் உபயோகிப்பதால் மூளை புற்றுநோய் ஏற்படுமா? உலக சுகாதார அமைப்பின் புதிய ஆய்வு சொல்வதென்ன? விரிவாகப் பார்க்கலாம்.

PT WEB

செல்போன் மற்றும் செல்போன் டவரில் இருந்து வெளிவரும் மின்காந்த கதிர்வீச்சால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்றும் குறிப்பாக புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்பு இருப்பதாக மக்கள் மத்தியில் நீண்டகாலமாக பேசப்படுகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது உலக சுகாதார அமைப்பு. செல்போன் பயன்பாடு மூளை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா? என்ற கேள்விக்கான பதில் நம்மை நிம்மதி பெருமூச்சுவிட வைக்கிறது.

செல்ஃபோன் - மூளை புற்றுநோய்

உலகெங்கிலும் இருந்து 1994 முதல் 2002 வரையில் பெறப்பட்ட 63 ஆராய்ச்சிகளை மதிப்பாய்வு செய்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் பத்து நாடுகளைச் சேர்ந்த 11 திறன்மிக்க ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

செல்போன்கள், தொலைக்காட்சி, குழந்தைகளுக்கான மானிட்டர்கள் மற்றும் ரேடார் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் கதிரியக்க அதிர்வெண்ணின் விளைவுகள் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது. அதிகரித்து வரும் செல்போன் உபயோகத்திற்கும் மூளை புற்றுநோய் பாதிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவரின் செல்போன் பயன்பாட்டின் கால அளவு, மூளை புற்றுநோயுடன் தொடர்புடையதாக இல்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். செல்போன்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சிலிருந்து தீங்கு ஏற்படுத்தும் விளைவுகள் இல்லை என்றாலும், தொடர் ஆராய்ச்சிகள் தேவை என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். அதே நேரம், புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (IARC) செல்போன் கதிர்வீச்சு, புற்றுநோயை உண்டாக்குவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது என்ற நிலையில் வகைப்படுத்தி வைத்திருக்கிறது.