ஹெல்த்

இடுப்பு சதை பிரச்னையா? காலை உணவில் இந்த தவறுகளை செய்யாதீங்க!

இடுப்பு சதை பிரச்னையா? காலை உணவில் இந்த தவறுகளை செய்யாதீங்க!

Sinekadhara

காலை உணவை ராஜாவைப் போன்றும், மதிய உணவை மந்திரியைப் போன்றும், இரவு உணவை யாசகனைப் போன்றும் உண்ணவேண்டும் என சொல்வதுண்டு. இதை காரணமில்லாமல் நம் முன்னோர்கள் சொல்லி வைக்கவில்லை. ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிகுந்த காலை உணவானது ஒரு நாள் முழுவதுக்கும் போதுமான ஆற்றலை வழங்குகிறது.

காலை நேரத்தில் அதிக கலோரி நிறைந்த உணவுகளை உட்கொண்டால் தோலுக்கு அடியில் மற்றும் உள்ளுறுப்புகளில் கொழுப்பு தங்கிவிடும். இதை குறைப்பது கடினம். இடுப்பளவை ஸ்லிம்மாக வைத்திருக்க விரும்பினால் உணவுகளின் கலோரிகளின்மீதும் சற்று கவனம் வைப்பது அவசியம். காலை உணவில் எந்தெந்த உணவுகளை தவிர்ப்பது எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என்பது குறித்து பார்க்கலாம்.

இனிப்பு பானங்கள்: இனிப்பு சுவையூட்டப்பட்ட ஜூஸ்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்கள் போன்றவை உடலில் சேரும் கலோரிகளின் அளவை அதிகரிக்கும்.

சுத்திகரிக்கப்பட்ட மாவு: சுத்திகரிக்கப்பட்ட மாவில் ஊட்டச்சத்துகள் எதுவும் இருக்காது. ஆனால் அதில் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் நிறைந்திருக்கிறது. இது உடலில் சேரும் கலோரிகளின் அளவை அதிகரித்து வயிற்றுச்சதையை அதிகரிக்கும்.

செயற்கை இனிப்பு சுவையூட்டிகள்: செயற்கை இனிப்புகளில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட குறைவான கலோரிகள் இருந்தாலும், அவை நீரிழிவு, கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்னை போன்ற உடல்நல குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.

வறுத்த உணவுகள்: ஆரோக்கியமற்ற காலை உணவுகளில் வறுத்த உணவும் ஒன்று. இதில் நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் நிறைந்திருப்பதால் இடுப்பு சதையை அதிகரித்து மொத்த உடல் ஆரோக்கியத்தையே கெடுத்துவிடும்.

பேக்கரி பொருட்கள்: எண்ணெயுடன் சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்பட்ட மஃபின், டோனட் மற்றும் இனிப்பு பிரட் போன்ற உணவுகள் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பவையே. இவற்றை காலை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லதல்ல.

பீனட் பட்டர்: கலோரிகள் நிறைந்த பீனட் பட்டரில் உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு அதிகளவில் இருக்கிறது.

தானியங்கள் மற்றும் கிரானோலாக்கள்: இந்த உணவுகளை சேர்த்துக்கொள்வது உடலுக்கு ஆரோக்கியம் என சிலர் கருதினாலும், காலைநேரத்தில் இவற்றை எடுத்துக்கொள்வது நல்லதல்ல. அதிலும் பதப்படுத்தப்பட்ட சர்க்கரை நிறைந்தவற்றை உட்கொள்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.