கால்கள் செயலிழந்த ஒரு நபர் சுயமாக படிக்கட்டுகளில் ஏறவும், சரிவுகளில் இறங்கவும் வைத்து, அவர் தானாக எழுந்து நிற்பதில் இருந்து தானாக நடக்கவும் முடியும் என்பதை சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளனர்.
கால்கள் செயலிழந்த ஒருவரின் மூளை மற்றும் முதுகுத் தண்டு ஆகியவற்றில் இம்ப்ளாண்ட் செய்து, அவரது எண்ணங்களை வெளிபுற சாதனங்களுடன் இணைத்து - பின் மொழிபெயர்த்து இதை சாத்தியமாக்கியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். நேச்சர் இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கெர்ட் ஜான் ஒஸ்காம் என்ற 40 வயது நபர் 12 வருடங்களுக்கு முன்பு ஒரு மோட்டார் வாகன விபத்தில் சிக்கியதில் அவரது இடுப்புக்கு கீழ் உள்ள பகுதிகள் முற்றிலுமாக செயலிழந்துள்ளன. முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டு கால்களை அசைக்கக்கூட முடியாமல் செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அப்போதிலிருந்தே பல்வேறு சிகிச்சைகளின் மூலம் இழந்த தன் காலை சரிசெய்ய முயற்சி செய்து வந்துள்ளார்.
2017-ம் ஆண்டு ஒஸ்காம் ஒரு வித்தியாசமான மருத்துவ பரிசோதனையின் ஒரு பகுதியாக அவரது முதுகுத் தண்டு வடத்தில் ஒரு இம்ப்ளாண்ட் செய்துக்கொண்டார். இது அவர் நடக்க உதவியது. அதன்மூலம் ஒஸ்காம் எப்போதெல்லாம் உடலுக்கும் ஒரு மின்னோட்டத்தைத் தூண்டுகிறாரோ, அப்போதெல்லாம் அது அவரது முதுகுத் தண்டுவடத்தில் நரம்புகளைத் தூண்டி அவரது கால்களை அசைக்க உதவும்.
ஆனால் அந்த செயல்முறை அவருக்கு மிகந்த குழப்பத்தை கொடுத்துள்ளது. அக்குழப்பத்தினால் படிக்கட்டுகளில் ஏறவோ சீரற்ற பரப்புகளில் நடக்கவோ அவரால் முடியவில்லையாம். இதனால் வேறு சிகிச்சை முறைகளை தேடி சென்று தற்போது புதிய ஆய்வு முறையை கண்டறிய உதவியுள்ளார் அவர்.
அந்த புதிய சிகிச்சையின் படி, ஒஸ்காம் தனது கால்களை நகர்த்தவேண்டும் என நினைக்கும்போது அவரது மூளையில் உள்ள இம்ப்ளாண்ட், அவரது உடலுக்கு வெளியில் உள்ள ஒரு கணினிக்கு சமிக்ஞையை அனுப்புகிறது.
இந்த இம்ப்ளாண்ட்க்கான கணினி-ஐ ஒஸ்காம் ஒரு பையை போல அணிந்துள்ளார். அந்த கணினி, ஒஸ்காமின் அடிவயிற்றில் அந்த சமிக்ஞையை செயல்படுத்துகிறது. இது அவரது முதுகு தண்டுவடத்தில் ஏற்கெனவே இருந்த இம்ப்ளாண்டுக்கு மின் துடிப்புகளை அனுப்புகிறது. அவை ஒஸ்காமின் கால்களை நகர்த்த தூண்டுகின்றன.
ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானி ஹென்றி லோராச் “நாங்கள் அவரை முதன்முறையாக சந்தித்தபோது அவர் முற்றிலும் முடங்கியிருந்தார். அவரால் ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியவில்லை. புதிய நடைமுறையை பயன்படுத்துவதன் மூலம் பல பயிற்சிகளுக்குப் பிறகு ஒஸ்காமால் இயற்கையாக நடக்க முடிந்தது. அவர் தன் கால் அசைவுகளின் மீது அதிக கட்டுப்பாட்டை பெற்றார் மற்றும் அவரால் படிக்கட்டுகளில் ஏறவும் சீரற்ற பாதைகளில் நடக்கவும் முடிந்தது.
ஒஸ்காம் இப்போது ஒரு நாளைக்கு 100 முதல் 200 மீட்டர்கள் வரை தனியாக நடக்கலாம் மற்றும் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை எந்த ஒரு ஆதரவின்றியும் நிற்கலாம். மூளையின் சமிக்ஞைகளை இயக்கமாக மாற்றும் திறனில் தற்போதுள்ள தொழில்நுட்பங்களில் இருந்து இந்த அமைப்பு வேறுபட்டது” என கூறியுள்ளார்.
தன் கால்களை திரும்ப பெற்ற ஒஸ்காம் இதை பற்றி பேசியபோது, “12 வருடங்களாக நான் என் கால்களை மீண்டும் பெற முயற்சி செய்கின்றேன். பழைய சிகிச்சையில் தூண்டுதல் என்னை கட்டுப்படுத்தியது. என்னால் இயல்பாக நடக்கமுடியவில்லை. ஆனால் இப்போது நான் தூண்டலை கட்டுப்படுத்துகிறேன். பழைய நடைமுறையின் போது, ஒவ்வொரு அடி வைக்கும்போதும் நான் சற்று அழுத்தமாக உணர்ந்தேன்.
நான் மிகவும் ஜாக்கிரதையாக என் அடியை எடுத்துவைக்க வேண்டும்., இல்லையெனில் என்னால் நடக்கமுடியாத நிலை இருந்தது. அதுவே இப்போது என் வீட்டில் பெயிண்ட் அடிக்கும் வேலையை யாரின் துணையும் இல்லாமல் நின்றுக்கொண்டு நானே செய்தேன்” என மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.