ஹெல்த்

ஆயுள்காலத்தை கூட்டுகிறதா 'ப்ளாக் டீ'? என்ன சொல்கிறது ஆய்வு?

Sinekadhara

காலை எழுந்தவுடன் ஒரு கப் காபி அல்லது டீ குடிக்காவிட்டால் 99% பேருக்கு அந்த நாளே தொடங்காது. இதை யுனிவர்செல் ஹேபிட் என்றே சொல்லலாம். அதிலும் காபியைவிட டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் ஒரு கப் டீ குடித்தால் போதும்; அனைத்தும் பறந்துவிடும். டீ குடித்தால் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

ஒவ்வொரு நாடுகளிலும் அந்தந்த கலாசாரத்திற்கு ஏற்றவாறு க்ரீன் டீ, ப்ளாக் டீ மற்றும் ஹெர்பல் டீ என பல்வேறு டீ வகைகளை விரும்பி அருந்துகின்றனர். ஒருநாளில் இரண்டு அல்லது மூன்று கப் ப்ளாக் டீ குடிப்பது இறக்கும் அபாயத்தை 9லிருந்து 13% குறைப்பதாக கூறுகிறது புதிய ஆய்வு.

மேலும் பால் அல்லது சர்க்கரையைப் பயன்படுத்தினாலும், பயன்படுத்தாவிட்டாலும் இதிலிருந்து கிடைக்கும் நன்மைகள் ஒரே மாதிரியாகவே இருக்கும் என்கிறது அந்த ஆய்வு. இதேதான் காபிக்கும் பொருந்தும்.

அன்னல்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசின் இதழில் வெளிவந்த ஆய்வில், வழக்கமாக தேநீர் அருந்துபவர்களில் 89 சதவீதம் பேர் பிளாக் டீயை அருந்துவதை கண்டறிந்துள்ளனர். அதேபோல் க்ரீன் டீயிலும் பல்வேறு ஆரோக்கியக்கூறுகள் இருப்பதாகக் கூறுகிறது அந்த ஆய்வு. டீயிலுள்ள ஆரோக்கிய நலன்கள் பற்றி கூறுகையில், தினசரி டீ குடிப்பது இதய நோய்கள், டிமென்ஷியா மற்றும் கேன்சர் போன்றவற்றிற்கு எதிராக போராடுகிறது. இந்த பானத்திலுள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள் ரத்தத்திலுள்ள இறந்த செல்களை வெளியேற்றி அழற்சியை குறைக்க உதவுகிறது. தினசரி 5 கப் ப்ளாக் டீ குடிப்பது மூளை செயல்பாட்டை மேம்படுத்தும் என்கிறது மற்றொரு ஆய்வு.

ஆனால் அதேசமயம், சூடான டீயை வேகமாக குடிப்பது உணவுக்குழாயில் வெப்ப காயத்தை உருவாக்கி, சேதப்படுத்தி தொண்டை புற்றுநோய் அல்லது உணவுக்குழாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் எனவும் அந்த ஆய்வு எச்சரித்திருக்கிறது.