ஹெல்த்

கால் நகங்கள் நிறம் மாறுகிறதா? - கவனம் செலுத்துங்கள்! தொற்றாக இருக்கலாம்

கால் நகங்கள் நிறம் மாறுகிறதா? - கவனம் செலுத்துங்கள்! தொற்றாக இருக்கலாம்

Sinekadhara

அழகான, சுத்தமான கை, கால்கள் வேண்டும் என்ற எண்ணம் யாருக்குத்தான் இருக்காது? எப்போதும் கை, கால் மற்றும் அக்குள் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு தொற்றுக்களுக்கு ஆளாக நேரிடும். முறையான பராமரிப்பற்ற நகங்களில் சிறிது நிறமாற்றம் ஏற்பட்டாலே கவனம் செலுத்துவது அவசியம். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

பெரும்பாலும் நகங்களில் பூஞ்சை தொற்று ஏற்படும். நிறம் மாறுதல், தடிமன் மற்றும் நகம் உடைதல் போன்றவை பூஞ்சை தொற்றின் அறிகுறிகள். இதனை ஓனிகோமைகோசிஸ் என்று அழைக்கின்றனர். கை விரல்களைவிட கால் விரல்களிலேயே இந்த தொற்று அதிகம் ஏற்படுகிறது.

தொற்று எதனால் ஏற்படுகிறது?

டெர்மடோபைட்டுகள் என்ற பூஞ்சைதான் ஓனிகோமைகோசிஸை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இது உடலிலுள்ள கெரட்டினை உண்டு வளரக்கூடியவை பூஞ்சை ஆகும். இந்த பூஞ்சை நகத்தை மஞ்சள், ப்ரவுன், பச்சை அல்லது கருப்பாக மாற்றும்.

இது பெரும்பாலும் வயதானவர்கள், நீரிழிவு, நோயெதிர்ப்பு திறன் பலவீனமானவர்கள் மற்றும் இதயநோய் உள்ளவர்களை இந்த பூஞ்சை எளிதில் தாக்கும். இதுதவிர வெயில்காலத்தில் அதிக வியர்வை, வெறும்காலில் நடத்தல் மற்றும் காயங்களை அப்படியே விடுதல், நகங்களருகே ஏற்பட்ட காயங்களை கவனிக்காமல் விடுதல் போன்றவையும் பூஞ்சைத் தொற்று வழியை ஏற்படுத்தும்.

தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

1. கால்களை சுத்தப்படுத்தி, நகங்களை வெட்டி தனிமனித சுகாதாரத்தை கடைபிடிப்பது அவசியம்.

2. நகங்களை சுற்றி காயம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவும். அப்படியே காயம் ஏற்பட்டாலும் ஆண்டிபயாடிக் க்ரீம்களை தடவி விரைவாக குணப்படுத்தவும்.

3. விரல் இடுக்குகளில் வியர்வை தங்காமல் இருக்க எப்போதும் கை, கால்களை கழுவி சுத்தமாக வைத்திருக்கவும். எப்போதும் ஈரப்பதம் இன்றி துடைத்து வைத்திருப்பது அவசியம்.

4. அதிக கெமிக்கல் கலந்த தரம் குறைந்த நெயில் பாலிஷ்களை தவிர்ப்பது நல்லது.

5. கால்களுக்கு காற்று கிடைக்கும் வண்ணம் தரம் வாய்ந்த ஷூக்கள் மற்றும் செருப்புகளை பயன்படுத்தவும்.

6. தொற்றுகள் வராமல் தடுக்கும் பூஞ்சை எதிர்ப்பு க்ரீம்கள் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.