மார்பக புற்றுநோய்  கோப்புப்படம்
ஹெல்த்

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்: நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள்!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மார்பக விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது.

ஜெனிட்டா ரோஸ்லின்

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிக்கையின் படி, கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 2.3 மில்லியன் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்

மார்பக புற்றுநோய்

மார்பகத்தில் உள்ள செல்கள், கட்டுப்பாடின்றி பெருகும்போது ஏற்படும் பாதிப்புதான், மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது. இந்திய பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோயாக மார்பக புற்றுநோய் உள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்ட 100ல் 80 பெண்களுக்கு எந்தவித பாதிப்பு காரணிகளும் இருப்பதில்லை.

மார்பக புற்றுநோயை பொறுத்தவரை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிப்பது மட்டும்தான் சரியான தீர்வென்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அதெப்படி ஆரம்பத்திலேயே கண்டறிவது என்று சிலர் நினைக்கலாம். அதற்கு சில பரிசோதனைகள் உள்ளன. அவற்றை பார்க்கலாம்.

பரிசோதனைகள்

மேமோகிராம் எனப்படும் மருத்துவப் பரிசோதனையின் மூலம் ஆரம்ப காலத்திலேயே ஒருவரால் மார்பக புற்றுநோயை கண்டறிய முடியும்.

40 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் ஆபத்துக்காரணிகள் இல்லாமல் இருப்பினும், ஆண்டுக்கு ஒருமுறை மேமோகிராம் செய்வது சிறந்தது.

சுயப்பரிசோதனை செய்வதுதான் அனைத்துக்கும் முதன்மை

மேமோகிராம்

அறிகுறிகள்:

  • மார்பகத்தில் வீக்கம்

  • மார்புக் காம்பிலிருந்து ஏதேனும் திரவம் வெளியேற்றம்

  • மார்பகக்காம்பு மற்றும் மார்பக தோல் சிவத்தல்

  • மார்புக்காம்பு உள்நோக்கி செல்வது போல் தெரிகிறது

  • தோள்பட்டை, கை, அக்குளில் வீக்கம்.

இந்த அறிகுறிகள் ஏதேனும் ஒன்று இருந்தாலும், அவர்கல் நிச்சயமாக மருத்துவரிடம் சென்று சோதனை மேற்கொள்ள வேண்டும். ஆபத்துக் காரணிகள் ஏதும் இல்லை என்று புறக்கணித்து விடக்கூடாது.

மார்பக புற்றுநோய்

இதிலும் அதிர்ச்சிதரக்கூடிய தகவல் என்னவென்றால், பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களும் மார்பக புற்றுநோய்க்கு ஆளாகக்கூடும்.

ஆண்களில் சுமார் 81 சதவீதம் பேருக்கு மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் என்ன, எப்படி கண்டறிய வேண்டும் என்பது குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதை அதிகப்படுத்த பல்வேறு முயற்சிகளால் மருத்துவர்களால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழிசை சௌந்தரராஜன்

அந்தவகையில், மார்பக புற்றுநோய் குறித்து பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மருத்துவருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று வீடியோவொன்று வெளியிட்டுள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன்

அதில், “மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய மாதம், அக்டோபர். இது மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்கான மாதம். இதனை பிங்க் மாதம் என்றும் அழைப்பார்கள். பெண்கள் அனைவரும் கட்டாயம் மாதம் ஒருமுறை மார்பக சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

ஏதாவது கட்டி தென்பட்டால், மருத்துவ பரிசோதனை , மருத்துவ ஆலோசனை செய்து கொள்ள வேண்டும். தென்படும் அத்தனை கட்டிகளும் புற்றுநோய்க்கட்டிகள் இல்லை.. ஆனால், கட்டிகள் தென்படுமாயின் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இந்நோய் குறித்து மருத்துவ விழிப்புணர்வை நாம் அனைவரும் ஏற்படுத்த வேண்டும். இந்த பிங்க் மாதத்தில் மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வை பெறுவோம், புற்றுநோயிலிருந்து விடுபடுவோம், ஆரோக்கியமாக வாழ்வோம்” என்று தெரிவித்துள்ளார். விழிப்புணர்வோடு இருப்போமாக!