தேநீர் - காபி  முகநூல்
ஹெல்த்

சுட்டெரிக்கும் வெயிலில் சுடசுட டீ குடிக்கப்போறீங்களா? அய்யயோ... இதை மட்டும் பண்ணிடாதீங்க!

கோடை வெயில் சுட்டெரிக்கும் நேரத்திலும், புத்துணர்ச்சிக்காக தேநீர் குடிக்கும் வழக்கம், நம்மில் பலருக்கும் இருக்கிறது. இந்தப் பழக்கம் உடலின் நீர் இழப்பை அதிகரித்து, உடல் நலத்தை பாதிக்கும் என்று எச்சரிக்கிறது மருத்துவ உலகம்.

PT WEB

செய்தியாளர்: பிரவீன்

தேநீர்... தற்காலத்தில் ஒவ்வொருவரின் காலைப்பொழுதையும் இனிமையாக்குவது இந்த 'தேன் நீர்' தான்... சிலருக்கு, காலையில் எழுந்ததில் இருந்து இரவு உறங்கும் வரை ஒவ்வொரு தருணத்திலும் தேநீரையோ காபியையோ குடித்தால்தான், அன்றைய தினமே சிறப்பாக இருப்பதாக உணர்வார்கள்...

சிலரெல்லாம் தேநீர் குடிக்க நினைத்துவிட்டு, அதை குடிக்க முடியாமல் போனால், எதையோ இழந்ததுபோல இருப்பார்கள். இப்படியாக தேநீருக்கு அடிமை என்று சொல்லும் அளவுக்கான பிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கோடை வெயில் சுட்டெரித்து, வெப்பம் உடலில் இறங்கினாலும், தேநீர்க்கடைகளைத் தேடுவோரும், பட்டியலில் இருக்கிறார்கள்.

ஆனால், வெயில் சுட்டெரிக்கும் கோடை காலத்தில் தேநீர் - காபி போன்ற சூடான பானங்களை நாளுக்கு ஒன்று என குறைத்துக் கொள்வதே நலம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தேநீர் - காபி போன்றவை, உடலில் நீர் இழப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றன மருத்துவ ஆய்வுக் கட்டுரைகள். கோடை காலங்களில் வியர்வை மூலமாக நீர் இழப்பு ஏற்படுவது இயல்புதான். இப்படியான நேரங்களில் அடுத்தடுத்து தேநீர் - காபி என பருகுவது, உடலுக்கு மேலும் அசவுகரியத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

நீர்மோர், பழச்சாறு, கூழ் போன்றவற்றை பருகலாம் என்பது அவர்களின் அறிவுரை. சிலர் லெமன் டீ குடிப்பதாகக் கூறுகிறார்கள். அதுவும் கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரை.

இந்த ஆண்டு கோடையில் வழக்கத்தை விட மிக அதிகமான வெப்பம் நிலவும் சூழலில், டீ - காபி குடிப்பதை, ஒரு நாளைக்கு ஒன்று என்றே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவற்றில் இருக்கும் கஃபைன் மூலம், அஜீரணக் கோளாறு, தலைவலி, குமட்டல், வாந்தி மற்றும் டயரியா என உடல் வதைபட நேரிடும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.