ஹெல்த்

தயிருடன் இவற்றையெல்லாம் சேர்த்து சாப்பிடுகிறீர்களா?

தயிருடன் இவற்றையெல்லாம் சேர்த்து சாப்பிடுகிறீர்களா?

Sinekadhara

சிறியவர் முதல் பெரியவர்வரை பெரும்பாலானவர்களுக்கு தயிர் மிகவும் பிடிக்கும். இதில் கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் எளிதில் செரிக்கக்கூடிய உணவும்கூட. ஆனால் சில உணவுகளுடன் தயிரை சேர்த்து சாப்பிடக்கூடாது என பலருக்கும் தெரியாது. அப்படி சேர்த்து சாப்பிடும்போது பலவித உடல் பிரச்னைகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.

வெங்காயம்

நிறையப்பேர் ஆனியன் ரெய்த்தாவை விரும்பி சாப்பிடுவோம். ஆனால் இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால், தயிர் குளிர்ச்சியானது, வெங்காயம் சூட்டை அதிகரிக்கும். குளிர்ச்சி மற்றும் சூடு இரண்டையும் சேர்த்து சாப்பிடும்போது அரிப்பு, தடிப்பு, எக்ஸிமா, சொரியாஸிஸ் போன்ற சரும பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

மாம்பழம்
தயிரில் வெட்டிய மாம்பழங்களைச் சேர்த்து சாப்பிடுவதை பலரும் விரும்புவர். ஆனால் ஆனியன் ரய்த்தாவைப் போன்றே மாம்பழம் சூட்டை அதிகரிக்கும், தயிர் குளிர்ச்சியை தரும். இதனால் சரும பிரச்னைகள் மற்றும் டாக்ஸின்ஸ் போன்ற பிரச்னைகள் உருவாகும்.

பால்
இவை இரண்டுமே விலங்கின் பாலிலிருந்து வருவதால் சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால் வயிற்றுப்போக்கு, அசிடிட்டி போன்ற பிரச்னைகள் வரும்.

மீன்

மீனுடன் தயிர் சேர்த்து சாப்பிடக்கூடாது என சிலருக்குத் தெரியும். ஆனால் பலர் மீன்குழம்புடன் தயிர் சேர்த்து சாப்பிடுவார்கள். இரண்டு புரதச் சத்துமிக்க உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடக்கூடாது. அசைவம் மற்றும் சைவம் என சேர்த்து சாப்பிடலாம். ஆனால் ஒரு சைவ புரதச் சத்துமிக்க உணவுடன் மற்றொரு சைவ புரதச் சத்துமிக்க உணவை சேர்த்து சாப்பிடக்கூடாது. தயிர் விலங்கிடமிருந்து எடுத்த பாலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மீனும் அசைவம். இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் அஜீரணக்கோளாறு மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும்.

வறுத்த உணவுகள்
அனைவருக்கும் நெய் ஊற்றிய பராத்தாவுடன் தயிர் சேர்த்து சாப்பிட மிகவும் பிடிக்கும். எண்ணெய் உணவுடன் தயிர் சேர்க்கும்போது செரிப்பதற்கு நீண்ட நேரம் ஆகும். மேலும் மந்தத்தன்மையை ஏற்படுத்தும். இதனால்தான் பூரியுடன் லஸ்ஸி சேர்த்து சாப்பிடும்போது அதிக தூக்கம் வரும்.

உளுந்து
உளுந்து சேர்த்த உணவுடன் தயிரை சேர்த்து சாப்பிடும்போது எளிதில் செரிக்காது. இதனால் வயிற்றுப்பொருமல், வாயுத்தொல்லை மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.