மகரந்த செறிவில், காற்று மாசுபடுத்திகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனவும், பலவகையான மகரந்தங்கள் பருவநிலைகளுக்கு ஏற்ப தனித்துவமான முறையில் செயல்படுகின்றன எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மகரந்தங்கள் காற்றில் கலந்து, நாம் சுவாசிக்கும் காற்றின் அங்கமாகின்றன. மனிதர்கள் இவற்றை உள்ளிழுக்கும்போது, அவை ஆஸ்துமா போன்ற அலர்ஜியை ஏற்படுத்துகின்றன.
காற்றில் கலக்கும் மகரந்தங்களின் குணம், பருவ நிலைகளுக்கு ஏற்ப இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. காற்றில் கலக்கும் மகரந்தங்கள், நகர்ப்பறங்களில் அலர்ஜி நோய்களை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதை கருத்தில் கொண்டு, சண்டிகரில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி முதுகலை நிறுவன பேராசிரியர் ரவீந்திர கைவால், சுற்றுச்சூழல் ஆய்வுகள் துறை பேராசிரியர் டாக்டர். சுமன் மோர் , ஆராய்ச்சி மாணவி அக்ஷி கோயல் ஆகியோர் இணைந்து சண்டிகரில் காற்றில் கலக்கும் மகரந்தங்களில் பருவநிலையின் தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். காற்றில் கலக்கும் மகரந்தத்துக்கும், வெப்பம், மழைப்பொழிவு, ஈரப்பதம், காற்றின் வேகம், திசை, காற்று மாசுபடுத்திகளுக்கு உள்ள தொடர்பு குறித்து இந்த குழுவினர் ஆராய்ந்தனர்.
இந்த ஆய்வுக்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை நிதியுதவி அளித்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் ‘சயின்ஸ் ஆப் த டோடல் என்விரான்மென்ட்’ என்ற இதழில் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வகையான மகரந்தமும், பருவநிலைக்கு ஏற்ப தனித்துவமாக செயல்படுவது இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஆய்வு முடிவுகள், காற்றில் கலக்கும் மகரந்தத்துக்கும், காற்று மாசுபடுத்திகள், மாறுபட்ட பருவநிலைகளுக்கும் இடையேயான சிக்கலான தொடர்பு பற்றிய புரிதலை அதிகரிக்கும். இவற்றை குறைப்பதற்கான கொள்கைகளை வகுக்கவும், காற்று மாசு அதிகம் உள்ள இந்தோ-கங்கை சமவெளிப் பகுதியில் மகரந்தத்தால் ஏற்படும் அலர்ஜிகளை குறைக்கவும் உதவும்.
Source : PIB