மார்ப்பக புற்றுநோய்  முகநூல்
ஹெல்த்

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் | “உங்கள் நலனை முன்னிலைப்படுத்துங்கள் பெண்களே...”- குஷ்பு!

’பெண்களின் ஆரோக்கியமும் நலனும் மிகவும் முக்கியம்’ - மார்பக புற்றுநோய் குறித்து நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

அக்டோபர் மாதம் முழுவதும் ‘மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்’ என்பதால், இதுகுறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு இடங்களில் பல முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன

அந்தவகையில், சென்னையிலுள்ள சுந்தரி சில்க்ஸ் மற்றும் Apollo proton இணைந்து இந்த பிங்க் மாதம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதிகப்படுத்தும் வகையில், ’Talk Pink' என்ற நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளனர்.

Talk Pink

அதில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பாக, தொகுப்பாளினி அர்ச்சனா, நடிகை ஜான்வி கபூர், பாடகி சைந்தவி, நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு உட்பட பல பிரபலங்கள் இணைந்து தங்களின் விழிப்புணர்வை பதிவு செய்து வருகின்றனர்.

இதில் நேற்று நடந்த நிகழ்வில், நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு கலந்துகொண்டு மார்பக புற்றுநோய் குறித்து சில முக்கியமான விஷயங்களைப் பேசினார். அதில் அவர்,

“ஒரு தாய்க்கு மிகவும் கடினமான சூழல் எது தெரியுமா? அது, உங்கள் குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்படும் நேரத்தில் உங்களின் உடல்நலனும் பாதிக்கப்படுவது. அப்படியான சமயத்தில், நீங்கள் உங்களது நலனுக்கு முதன்மைத்துவம் கொடுக்க வேண்டும் என்ற நிலை உருவாகும்.

என்னையே எடுத்துக்கொள்ளுங்கள்... என் குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால், நான் அவர்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தப்பின்புதான் என்னையே நான் கவனிப்பேன். சொல்லப்போனால், அதுபோன்ற நேரத்தில் எனக்கு தேவையானதை எடுத்துக்கொள்ளகூட நான் மறந்து விடுவேன். அப்படித்தான் எல்லா தாய்மார்களும்...

ஆனால், நீங்கள் குடும்ப பெண்ணாக இருக்கும் போது, உங்களது ஆரோக்கியமும் நலனும் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஏனெனில் உங்கள் குடும்பத்தில் அனைவரும் உங்களை சார்ந்துதான் இருக்கிறார்கள். ஆகவே உங்கள் உடல்நிலை சரியாக இல்லை எனில், உங்கள் குடும்பமும் நலமுடன் இயங்காது. உங்கள் தேவையே, குடும்பம் என்கையில், முன்கூட்டியே நீங்கள் உங்கள் நலனில் கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும்.

கோவிட் காலங்களில் இரண்டு முறை தொற்று காரணமாக, நான் தனிமைப்படுத்தப்பட்டேன். அந்த இரண்டு வாரங்களிலும், என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உணவு எடுத்துக் கொண்டார்களா, மருந்து எடுத்துக் கொண்டாரார்களா, நலமுடன் இருக்கிறார்களா, எப்படி தூங்குவார்கள் என்றெல்லாம் ஒரு தாயாக, மனைவியாக, குடும்பத்தலைவியாக என் முழு சிந்தனையும் அங்குதான் இருந்தது.

ஆனால் அந்த நேரத்தில் நான் என்னுடைய நலனில் நிச்சயம் கவனம் செலுத்தியே ஆக வேண்டும். கூடுதல் உறுதியுடன் நலமடைய வேண்டும். அப்போதுதான் எனது குடும்பத்தையும் என்னால் கவனித்துக் கொள்ள முடியும். அதை நான் அந்நேரத்தில் நன்றாகவே உணர்ந்தேன். இதுவேதான் பிற உடல்நல பாதிப்புகளுக்கும்.

பெண்களின் உடல்நலனில் மார்பக புற்றுநோய் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய ஒன்று.

எனது 35 வயதில் இருந்தே மார்பக புற்றுநோய் விழிப்புணர்வாக, குறிப்பிட்ட கால வரைமுறைக்கு ஒருமுறை mammogram செய்துவருகிறேன். ஏனெனில் எனக்கு எனது நலன் மிகவும் முக்கியமான ஒன்று. இதுபோக வீட்டிலேயே சுய பரிசோதனையும் நான் அடிக்கடி செய்து கொள்வேன்.

சுயபரிசோதனை செய்யும்போது, ஒரு சிலருக்கு சிறு கட்டி தென்பட்டால்கூட, ‘நான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளேனா?’ என்ற சந்தேகம் அல்லது பயம் அவர்களுக்கு ஏற்படலாம். அப்படியான சூழலில் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டியது முக்கியமான ஒன்று. ஒவ்வொரு பெண்ணும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் மருத்துவர்களிடம் சென்று சோதனை செய்து கொள்ளுங்கள். கூகுளில் இதற்கான தீர்வை தேடாதீர்கள். இதற்கென பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடத்தில் உங்கள் சந்தேகங்களை கேளுங்கள். அதற்கான தீர்வையும் கண்டறியுங்கள். மறக்காதீர்கள், எல்லா பிரச்னைகளுக்கு ஒரு தீர்வு உண்டு.

மார்பக புற்றுநோய்

எப்போதுமே வருமுன் காப்பது நல்லது. முக்கியமாக புற்றுநோய் தொடர்பான விஷயங்களில் மிகவும் விரைந்து செயல்படுவது முக்கியமான ஒன்று.

ஆகவே பெண்களே... முன்னேறி செல்லுங்கள். உங்கள் நலனில் அக்கறை கொள்ளுங்கள், உங்களுக்கான நேரத்தை சந்தோஷமாக கழித்திடுங்கள், உங்களின் நலனை முன்னிலைப்படுத்தியுங்கள். அப்பொழுதுதான் உங்கள் குடும்பத்தை நீங்கள் கவனித்துக்கொள்ள முடியும்” என்றுள்ளார்.

இதை வாசிப்பவர்கள், எந்த பாலினத்தவராக இருந்தாலும்... உங்களை சுற்றியுள்ளவர்கள் / உங்களின் அன்புக்குரியவர்கள்... என அனைவருக்கும் இந்த அறிவுரையை வழங்குங்கள். வருமுன் காப்பதும், விரைந்து சிகிச்சை பெறுவதுமே புற்றுநோய் தடுப்பில் முதன்மை என்பதால், தாமதம் வேண்டாம்!