கேரளா முகநூல்
ஹெல்த்

கேரளா: மீண்டும் அச்சுறுத்தும் மூளையை உண்ணும் அமீபா... மேலும் ஒருவர் மரணம்!

ஜெனிட்டா ரோஸ்லின்

கேரளா காசர்கோடு செம்நாடு கிராம பஞ்சாயத்து, உக்ரம்பாடியை சேர்ந்தவர் மணிகண்டன் (38). மணிகண்டனுக்கு திருமணமாகி நிமிஷா என்ற மனைவியும், நிவேத்யா, நைனிகா என்ற இரு மகள்களும் உள்ளனர். கேரளாவை சேர்ந்த இவர், மும்பையில் காய்கறி கடை ஒன்றினை நடத்தி வந்துள்ளார்.

மணிகண்டன்

இந்தநிலையில்தான், கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதியடைந்த மணிகண்டன், மும்பையிலிருந்து தனது வீட்டிற்கு வந்துள்ளார். அங்கே காசர்கோடு பொது மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக நினைத்து அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாட்கள் ஆக ஆக மணிகண்டன் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருக்கவே, ஒருவேளை மூளை உண்ணும் அமீபாவாக இருக்குமோ என்று சந்தேகித்துள்ளனர்.

இதனையடுத்து, காசர்கோடு மருத்துவமனையிலிருந்து பரியாரத்தில் உள்ள கண்ணூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இவரை அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து கண்ணூரில் உள்ள பேபி மெமோரியல் மருத்துவமனைக்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ளார். இங்குதான், அவருக்கு மூளையை உண்ணும் அமீபா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மணிகண்டன் ஏதெனும் நீர் நிலைகளில் குளித்தாரா? என்றெல்லாம் அவர்களது குடும்பத்தினரிடம் கேட்டப்பட்டுள்ளது. ஆனால், அவர் வெளி மாநிலத்தில் இருந்ததால் எந்த தகவலும் அவர்களுக்கு தெரியவில்லை.

இந்நிலையில், நோய்க்கான தீவிர சிகிச்சை மணிகண்டனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உடல்நிலை மோசமடைந்து வலிப்பு, காய்ச்சல் அதிகரிக்கவே சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் கேரளாவில் மூளையை திண்ணும் அமீபாவால் சமீபத்தில் 5 உயிர்கள் பறிபோயிருப்பதாக தெரிகிறது. இதற்கிடையே எம் பாக்ஸ், நிபா வைரஸ் பாதிப்புகளும் கேரளாவில் சமீபத்தில் கண்டறியப்பட்டு வருவது அம்மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.