நடைப்பயிற்சி முகநூல்
ஹெல்த்

தினமும் 30 நிமிட நடைப்பயிற்சி முதுகு வலியை குறைக்குமாம்! ஆராய்ச்சி முடிவுகள் சொல்வதென்ன?

ஜெனிட்டா ரோஸ்லின்

முதுகு வலி என்பது, தற்போது வயது வித்தியாசமின்றி எல்லாருக்கும் பொதுவான பிரச்னையாக மாறிவிட்டது. குறிப்பாக, அதிக நேரம் உட்கார்ந்து பணிபுரிபவர்களுக்கு முதுகு வலி தொடர்பான பிரச்னை மிகவும் அதிகமாக இருக்கிறது என்றே கூறலாம்.

சமீபத்தில் லான்செட் மருத்துவ இதழ் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் முடிவுகளானது, தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்வது கீழ் முதுகு வலியை குறைக்க உதவுவதாக தெரிவிக்கிறது. இந்த ஆய்வின் மூலம், 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தங்களின் கீழ் முதுகு வலியிலிருந்து நடைப்பயிற்சி மூலம் குணமடைகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இந்த ஆய்விற்காக ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இருந்து 54 வயது நிரம்பிய 701 பேர் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆராய்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒருபிரிவினர் ஒரு சில வழிகாட்டு முறைகளை கடைப்பிடிப்பவர்களாகவும் (intervention group), மற்றொரு பிரிவினர் எந்த ஒரு சிகிச்சை / வழிகாட்டு நெறிமுறைகளை முறையை பின்பற்றாத சாதாரண வாழ்க்கை முறையை பின்பற்றவர்களாகவும் இருந்துள்ளனர்.

பிசியோதெரபி மருத்துவர்களின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் intervention group பிரிவினர், தினமும் ஆறு மாதங்களுக்கு மருத்துவரின் ஆறு அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளனர். அதில் 1, 3, 5 ஆவது அமர்வுகளில் நடைப்பயிற்சியை மேற்கொள்ள அவர்கள் ஊக்குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆறுமாதங்களுமே ஒவ்வொரு நாளும் சுமார் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள அவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

மற்றொரு பிரிவினருக்கு எந்த ஒரு சிகிச்சையும் அறிவுரையும் வழங்கப்படாமல் அப்படியே இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறுதியில் தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களுக்கு கீழ் முதுகு வலி குறைந்ததற்கான சாத்திய கூறுகள் தென்பட்டுள்ளன என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.

இவர்களுக்கு கிட்டதட்ட 208 நாட்கள் வலி குறைந்ததற்கான சாத்திய கூறுகள் இருந்துள்ளன. மற்றப்பிரிவினருக்கு 112 நாட்கள் மட்டுமே வலியின்மை உணரப்பட்டதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறது.