வீட்டில் வைக்கப்பட்டிருந்த மாத்திரையை தெரியாமல் உட்கொண்ட 2 வயது குழந்தை செங்கல்பட்டில் உயிரிழந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள தோட்ட நாவல் பகுதியை சேர்ந்தவர் அசோக். இவருடைய மனைவி நந்தினி. அசோக் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அசோக் மற்றும் நந்தினிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதில் இரண்டாவது குழந்தை லித்வின் வயது இரண்டு. கடந்த 3-ம் தேதி லித்வின், திடீரென்று வாந்தி மயக்கம் போன்ற பிரச்னையால் அவதிப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மதுராந்தகத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் பெற்றோர். இருந்தும் குழந்தைக்கு பிரச்னை சரியாகாத காரணத்தினால், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்துள்ளனர். எந்தவித காரணமும் இன்றி குழந்தை ஏன் திடீரென, வாந்தி மயக்கம் ஏற்பட்டது என்பது குறித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சோதனை செய்தனர். அப்போது குழந்தை பாராசிட்டமால் என்கிற மாத்திரையை விழுங்கிய காரணத்தினால், ஓவர்டோஸ் ஆகி குழந்தைக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து சிகிச்சையளித்தபோதும், சிகிச்சை பலனின்றி நேற்று குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதுகுறித்து குழந்தையை பரிசோதித்த குழந்தைகள் நல மருத்துவர் பிரவீன் குமார் கூறுகையில், “குழந்தை, பாரசிட்டாமல் மாத்திரையை சாப்பிட்டு 12 மணி நேரத்திற்கு மேல் ஆன காரணத்தினால் குழந்தையை குழந்தையை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.
ஒருவேளை குழந்தை மாத்திரை சாப்பிட்டு 8 மணி நேரத்திற்குள் மருத்துவ சிகிச்சைக்காக வந்திருந்தால் நிச்சயம் காப்பாற்றியிருக்கலாம்” என தெரிவித்தார். குழந்தையின் இறப்பு, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.