VR, 3D படம் முகநூல்
ஹெல்த்

VR,3D படத்தின் உதவியுடன் 18மாத குழந்தையின் புற்றுநோய் கட்டிகள் அகற்றம்! சென்னை மருத்துவர்கள் அசத்தல்

சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 மாத குழந்தைக்கு ஏற்பட்ட புற்றுநோய்கட்டிகளை ஒரு 3d மாடலாக வடிவமைத்து அதில் பயிற்சியை மேற்கொண்டு பின்னர் அறுவை சிகிச்சையின் மூலமாக புற்றுநோய் கட்டிகளை அகற்றி அக்குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

ஜெனிட்டா ரோஸ்லின்

சென்னை போரூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 மாத குழந்தையின் புற்றுநோய் கட்டிகளை VR, 3D படத்தின் உதவியுடன் அகற்றியுள்ளனர் மருத்துவர்கள்.

இது குறித்து சிகிச்சை அளித்த குழந்தை சிறுநீரக மருத்துவர் ரமேஷ் பாபு சீனிவாசன் கூறியதாவது, ” இக்குழந்தையின் 2 சிறுநீரகங்களையும் நீக்கிவிட வேண்டும் என்றுதான் ஆகஸ்ட் மாதத்தில் நாங்கள் எண்ணினோம். பொதுவாக குழந்தைகளின் சிறுநீரகங்களின் அளவு என்பது பெரியவர்களின் சிறுநீரகங்களைவிட 3 ல் 1 பங்கு மட்டுமே இருக்கும் .

சிறுநீரகம்

அதுவும் இந்த குழந்தைக்கு ஏற்பட்ட புற்றுநோய் கட்டியானது இக்குழந்தையின் 2 சிறுநீரகங்களையும் மறைத்து விட்டது. மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் கிட்டதட்ட குறைந்தது 2 வருடங்களாவது காத்திருப்பது அவசியம். அறுவை சிகிச்சை செய்வதற்கு அதே வயது மற்றும் எடை கொண்ட குழந்தைகளிடமிருந்து சிறுநீரகம் வந்தால்தான் அதையும் செய்ய முடியும். இப்படி எல்லா நிபந்தனைக்குட்பட்டு சிறுநீரகம் கிடைப்பதும் கடினம். அவ்வாறு கிடைத்தாலும் சில சமயம் அந்த உறுப்பு உடலுக்கு பொறுந்தாமல் போய்விடும்.

அதுமட்டுமல்லாது டயாலிசிஸ் செய்வது குழந்தையின் வளர்ச்சியையும் தாமதப்படுத்துவதாக அமையும். எனவே இக்குழந்தையை காப்பாற்ற எங்களால் முடிந்ததை செய்ய விரும்பினோம். குழந்தைகளில் சிறுநீரக புற்றுநோய் என்பது அரிது. அதிலும் 2 சிறுநீரகங்களிலும் கட்டிகள் வருவது என்பது அதைவிட அரிதான ஒன்று.

எனவே குழந்தை புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஜூலியஸ் ஸ்கார்டின் உதவியுடன் 6 மாதங்கள் இக்குழந்தைக்கு கீமோதெரபியானது வழங்கப்பட்டது. அப்பொழுதுதான் vr virtual reconstruction மூலம் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டோம். எனவே அக்குழந்தையின் சிறுநீரகங்களையும் அதன் கட்டிகளையும் 3டியாக பிரண்ட் செய்து அதை 3D மாடலானது வடிவமைத்து அறுவை சிகிச்சை செய்யவே செப்டம்பர் 26 ஆம் தேதி புற்றுநோயானது அகற்றப்பட்டது.

3D மாடல்

தற்போது கட்டிகளை எடுத்த பிறகு அவை இருந்த இடத்தில் பள்ளங்கள் காணப்படுகிறது. அவற்றை ஒரு பிரத்தியேக ஜெல் கொண்டு நிரப்பி உள்ளோம். குழந்தையின் சிறுநீரகத்தில் எந்த விதமான புற்றுநோய்யை ஏற்படுத்தும் கட்டிகளும் இருக்க கூடாது என்பதற்காக மீண்டும் ஒரு முறை கீமோதரப்பியானது செய்யப்பட்டும். தற்போது இக்குழந்தைக்கு எந்தவித பிரச்னையும் இல்லாமல் சீறுநீர் கழிக்கும் நிலையானது இருக்கிறது.” என்று தெரிவித்தார்.

மேலும், இந்த திட்டம் முழுவதும் ‘தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டு திட்டம்’ மூலமாக தான் செய்யப்பட்டது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது கூடுதலான தகவல்.